
நாளிதழின் நேர்மறை செய்திகளை வீட்டுச் சுவரில் ஒட்டி அதை மகன் பயிலும் கரும்பலகை ஆக்கி, 'வீட்டிற்குள் முடங்காதே; நாளிதழ் வாசி; சலுான், டீக்கடையில் அமர்ந்து மக்கள் பேசுவதைக் கேள்' என, தங்கள் மகன் சங்கரபாண்டியனை பழனிசாமி - உண்ணாமுலை தம்பதி வளர்த்தவிதம் வித்தியாசமானது!
நெசவாளியான தந்தையின் வருமான பற்றாக்குறை சங்கர பாண்டியனின் கல்வியை 8ம் வகுப்போடு நிறுத்தியது!
அடுத்த 15 ஆண்டுகளில்...
மறுக்கப்படும் உரிமைகள் மக்களுக்கு கிடைக்கும்வரை அதிகார மையத்தின் கதவுகளை தட்டுகின்ற இளைஞனாக சங்கரபாண்டியனை உருவாக்கி இருந்தது காலமும், தந்தையின் வளர்ப்பும்! மதுரை நகரப்பகுதியில் எங்கேனும் சாக்கடை பிரச்னை, அரசு அலுவலகங்களில் மக்கள் அலைக்கழிப்பு என்றறிந்தால் அங்கு இவரது தலையீடு இருக்கும்!
தேங்கி நிற்கும் சாக்கடையில் காகித கப்பல் விடுவது, காதில் பூ வைத்துக்கொண்டு வரி செலுத்துவது, நேர்மை அதிகாரிகளை பாராட்டி போஸ்டர் ஒட்டுவது, தெருநாய்களை கட்டுப்படுத்தாததை சுட்டிக்காட்டி தெரு நாய்களுக்கு 'கேக்' வெட்டி விழா எடுப்பது... இப்படி, சங்கர பாண்டியனின் நுாதன போராட்டங்கள் மதுரை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தலைவலியாக மாறின! அதேநேரத்தில்...
'போதை ஒழிப்பு, வாக்குரிமை' குறித்த இவரது சுவர் விளம்பரங்களுக்காக இவரை பாராட்டிய அதிகாரிகளும் உண்டு!
மக்களின் பரிசு
சாக்கடை சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவதால், 'சாக்கடை' சங்கரபாண்டியன் என்று அடைமொழியோடு சிலர் கேலி செய்ய, 'இதெல்லாம் நமக்கு தேவையா...' என்று வருந்திய மனைவி தமிழரசியிடம் இவர் சொன்னது இதைத்தான்...
'மக்கள் என்னை கோமாளியா நினைச்சாலும் பரவாயில்லை; என் செயலுக்கான பலன் அவங்களுக்கு கிடைச்சா போதும்!'
கடந்த சட்டசபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட இவருக்கு மக்கள் அளித்தவை 169 ஓட்டுகள்; 2022 உள்ளாட்சி தேர்தலில் 234 ஓட்டுகள்; கடந்த லோக்சபா தேர்தலில் 1,060 ஓட்டுகள்!
வாரிசுகளுக்காக...
இவரது மகள் உஷா 8ம் வகுப்பும், மகன் சக்தி 2ம் வகுப்பும் படிக்கின்றனர். டைல்ஸ் பதிக்கும் தொழிலில் மாதம் 25 - 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் சங்கரபாண்டியன், அதில் சேமித்த பணத்தில் செல்லுாரில் சொந்தவீடு கட்டியிருக்கிறார்.
இரவு தன் பிள்ளைகளின் கால் பிடித்து விட்டபடி மக்களின் பிரச்னைகளை கதைகளாக்கிச் சொல்கிறார்; இவரது எல்லா கதையிலும் நாயகன் ஒருவனே; 'அந்த ஹீரோ யாருப்பா' என்று பிள்ளைகள் கேட்கையில், 'நீங்கதான் அந்த ஹீரோ' என்கிறார்.
இப்படி, தன் தந்தை தன்னிடம் துாவிய விதையை தன் பிள்ளை களிடம் துாவி வருகிறார் இந்த அன்புள்ள சமூக ஆர்வலர்.

