PUBLISHED ON : மே 25, 2025

அரசியல் அறிந்த அப்பத்தாவும், என் அப்பாவி அப்பாவும்...
அடேய்... நான் பெத்த மகனே... அங்கீகாரம் இல்லாத தஞ்சாவூர் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களை தேர்வுக்கு ஒருமாசத்துக்கு முன்னால மாநில பாடத்திட்டத்துக்கு மாத்தி, நம்ம அரசு ஆசிரியர்கள் மூலமா வெறும் 30 நாள் பயிற்சியில மிகச்சிறந்த மார்க் வாங்க வைக்க முடியுதுன்னா...
'பத்தாம் வகுப்புல அதிக மார்க் வாங்குற எல்லா பிள்ளைகளையும் பிளஸ் 2 பரிட்சையிலேயும் அதேமாதிரி அதிக மார்க் வாங்க வைக்க ஏன் முடியலை'ன்னு அப்பத்தா கேட்குது... அதானே அப்பத்தா?
ஆமான்டா... இப்போ நீ பத்தாம் வகுப்புல 475 மதிப்பெண் வாங்கியிருக்கே! 'பிளஸ் 2 பரிட்சையிலேயும் இதேமாதிரி என் மகன் நிறைய மார்க் வாங்குவான்'னு உங்கப்பனை சொல்லச் சொல்லு பார்ப்போம்!
என்ன அப்பத்தா இப்படி சொல்லிட்டே... நான் டாக்டர்; முடியலேன்னா, கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆகப் போறேன்!
இந்தா சொல்லிட்டான்ல... இனி, அந்த பர்ஸ்ட்டு குரூப்புல இவனை சேர்த்துட்டு, மார்க்கு கம்மின்னு காலேஜுக்கு லட்சம் லட்சமா அழப்போறே பாரு!
ஏம்மா... பர்ஸ்ட்டு குரூப்புல சேர்த்தாதானே அவன் ஆசைப்படுற வாழ்க்கை அமையும்!
ஏலேய்... அதுல சேருற அத்தனைபேருக்கும் அதே ஆசைதான்டா... 'எல்லாருக்குமா எல்லாம்' கிடைக்குது; பத்தாம் வகுப்பு மார்க்கு எலிப்பொறியில தொங்குற வடை மாதிரிடா!
'ஆமாப்பா... அப்பத்தா சொல்றதும் நியாயம்தான்; பிளஸ் 1 'பர்ஸ்ட் குரூப்' அட்மிஷனுக்கு 'இடஒதுக்கீடு' பார்க்காம மார்க்கை பார்க்குறவங்க, அப்புறம் பூரா... இடஒதுக்கீட்டைத் தானே பார்க்குறாங்க! அதுல காலேஜ் சீட் கிடைக்கலையா... காசு... பணம்... துட்டு... 'மேனேஜ்மென்ட்' கோட்டா!
ஏம்மா... இவன் சரியா படிக்கலைன்னா வேற என்னம்மா பண்றது?
ஏன்டா மகனே... 'செஞ்சி பள்ளியில பிளஸ் 2 வேதியியல் பரிட்சை எழுதின 167 பேரும் 100க்கு 100 வாங்கினதுக்கு காரணம் ஆசிரியர்களோட திறமை'ன்னு அமைச்சர் மகேஷ் சொன்னப்போ, 'பசங்களோட கம்மியான மார்க்குக்கு யார் காரணம்'னு ஏன்டா யாரும் கேட்கலை?
அது எப்படிம்மா... எதைப் பேசுனாலும் கோர்வையா அவர் பேசுறப்போ எப்படி கேட்குறது?
நான் பெத்த மகனே... நீ மூளைக்காரன்டா!