
செய்தி: செப்டம்பர் 12, 2022ல் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை சம்பவம்; பிரசவத்தின் போது ஆசனவாய் கிழிந்த பிரச்னையை சீர்செய்வதில் நிகழ்ந்த அலட்சியத்தால் சிறுநீர் பாதையில் மலம் வெளியேறிய அவலம்!
செப்டம்பர் 26, 2022ல் கோவை அரசு மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சை; பல்வேறு அலைக்கழிப்புகளுக்கு பின் ஜூலை 29, 2024ல் பிரச்னையை முழுமையாக சீரமைப்பதாக சொல்லி சேலம் அரசு மருத்துவமனையில் இரண்டாவது அறுவை சிகிச்சை!
ஆயினும், 'இன்றும் என் உடலுக்கு வெளியே தொங்கும் பை வழியாகவே மலம் வெளியேறுகிறது; எனக்கு 'விடியல்' கிடையாதா' என்று கடந்த வாரம் 'அவியல்' பகுதியில் நீதி கேட்டிருந்தார் ஈரோடு ரம்யா.
அவரது குமுறல் பிரசுரமான மறுநாள்... மே 5, 2025 காலை 10:00 மணி.
அரசின் குரல்: வணக்கம். நான் ஈரோடு நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சாந்தகுமாரி பேசுறேன். கோபி அரசு மருத்துவனைக்கு மதியம் வர முடியுமா; நம்பிக்கையோட வாங்க ரம்யா... எல்லாம் சரியாயிரும்!
சொன்ன இடத்திற்கு சென்ற ரம்யாவிற்கு பல்வேறு சோதனைகளுக்குப் பின், '60 சதவீதம் சீரா இருக்குற உங்க உடல்நலனை 100 சதவீதம் சீராக்கி தர்றது எங்க பொறுப்பு' என நம்பிக்கை தந்து அனுப்பி வைத்திருக்கிறார் டாக்டர் சாந்தகுமாரி; சிகிச்சைகள் மிக விரைவில் துவங்க இருக்கின்றன.
ரம்யாவின் நன்றி: அரசே... 'தினமலர்' நாளிதழ் மூலமாக வந்த என் குரலுக்கு செவி மடுத்ததற்கு பெரும் நன்றி. சொன்னபடியே என்னை குணமாக்கி விடு; இந்த வேதனையில் இருந்து எனக்கு 'விடியல்' தந்த பெருமை பெறு.