
'யாருக்கும் அஞ்சாத ஊடகவியல் இல்லாவிடில் மக்களாட்சி இருளில் மாண்டுவிடும்' என்று உரக்கச் சொல்லும் தமிழக முதல்வருக்கான கேள்விகள்...
1. 'தி.மு.க., நிர்வாகிகள் செய்யும் துரோகம் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு செய்யும் துரோகம்' என்கிறீர்களே... தேர்தல் வாக்குறுதிகளை நம்பி ஓட்டுப் போடும் மக்களுக்கு இழைக்கப்படும் நம்பிக்கை துரோகம் எதற்கு ஈடானது?
2. 'திருமாவளவன் என் மூத்த சகோதரர்' என நீங்கள் உணர்ச்சிவசப்பட்ட நிகழ்வு, 'தி.மு.க.,வை மட்டுமே வி.சி.க., நம்பி கிடப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர்' என திருமாவளவன் சொன்னபோது நினைவிற்கு வந்ததா?
3. 'ஸ்டாலின் பஸ் மூலம் மாதம் ரூ.2,000 சேமிக்க முடிகிறது' என்று மகிழ்ச்சி பகிர்ந்த நம் பெண்களிடம், 'இந்த சேமிப்புத் தொகையை உங்கள் வீட்டு ஆண்கள் 'டாஸ்மாக்'கிற்கு எடுத்துச் செல்வதுண்டா' என விசாரித்தீர்களா?
4. 'எல்லார்க்கும் எல்லாமும்' எனச் சொல்லப்படும் இந்த நான்காண்டு ஆட்சியில் அமைச் சர்கள், அரசு அதிகாரிகள் வாழ்வில் நிகழ்ந்த கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, பாலியல் குற்றம், விபத்துகளின் எண்ணிக்கை எவ்வளவு?
5. போருக்கான தங்களது ஆதரவு நிலைப்பாட்டில் பிரதமரை முன்னிறுத்தாமல் ராணுவத்தை முன்னிறுத்தி புகழ்ந்த தங்கள் சாதுர்யம், இங்கு எல்லாவற்றிற்கும் தங்களையே முன்னிறுத்திப் புகழ்வோருக்கு வகுப்பு எடுத்திருக்குமா?
6. 'முதல்வரிடம் இந்த கேள்விகள்தான் கேட்கப்பட வேண்டும் என பத்திரிகையாளர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர்' என எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு வைத்து விட்டார். அதனை அர்த்தமற்றதாக்க தங்களது திட்டம் என்ன?
7. பணியில் இருப்பினும் வெயில் கொடுமையால் தொப்பி அணியாமல் நிற்கும் போக்குவரத்து போலீசார், 'தலை கவசம் எங்கே' என்று மடக்கி கேட்கையில், 'தரமான சாலை எங்கே' என்று கேட்காத மக்கள் பற்றி தங்கள் கருத்து?
7½ 'யார் அந்த சார்?' - விடை எப்போது?