
காஞ்சிபுரம், பரந்துாரில் இருந்து கள அரசியல் பயணத்தை துவக்கி இருப்பதாகச் சொல்லும் த.வெ.க., தலைவரிடம் பதில் கேட்கிறது தமிழகம்!
01. 'தமிழக மாணவியரின் அண்ணன் நான்' எனச் சொல்லும் நீங்கள், அண்ணா பல்கலை மாணவி தொடர்பான வழக்கு விசாரணையின் நிலை அறிய முதல்வரை சந்திப்பீர்களா?
02. 'சென்னை வெள்ளத்திற்கு நீர்நிலைகள் அழிப்பே காரணம்' என ஆய்வுகள் சொல்வது
இருக்கட்டும்; அரசின் 'மழைநீர் வடிகால் பணி'யில் உங்களுக்கு திருப்தியா?
03. 'மதுரை அரிட்டாபட்டி மக்கள் போலத்தானே பரந்துார் மக்களும்' என பொங்கினீர்களே... பரந்துாருக்கு வந்த உங்களை அரிட்டாபட்டி செல்ல தடுத்தது எது?
04. 'மக்கள் நம்பும்படி நாடகம் ஆடுவதில் தி.மு.க., கில்லாடி' எனும் உங்கள் பேச்சுக்கு கைதட்டிய மக்கள், 'விஜய் சிறந்த நடிகர்' என்பதை மறந்திருப்பார்களா என்ன?
05. 'வளர்ச்சியின் பெயரால் நிகழும் அழிவு மக்களை பாதிக்கும்' என்று சீரிய முறையில் சிந்திக்கும் நீங்கள், 'கலை எனும் பெயரில் சமூக சீரழிவுகளுக்கு 'சினிமா'வும் முக்கிய காரணம்' என்றால் ஏற்பீர்களா?
06. 'எதிர்க்கட்சியாக விவசாயிகளுக்கு ஆதரவு; ஆளுங்கட்சியாக எதிர்ப்பா' எனும் உங்கள் கேள்வி போல், 'நடிகனாக பரந்துாருக்கு தெரியாத வழி, கட்சி தலைவரானதும் தெரிகிறதா' என்றால் பதில்?
07. நம்பிக்கை வற்றுவதாக மக்கள் சொல்லாத நிலையில், 'உங்கள் ஊர் அம்மன் மீது நம்பிக்கை இழந்து விடாதீர்கள்' எனும் வேண்டுகோள் எதற்காக ஜோசப் விஜய்?
7½ 'வேங்கைவயல்' பயணம் எப்போது?