PUBLISHED ON : ஜன 19, 2025

சந்தானம் எனும் சர்க்கரை துாவிய கஞ்சி!
முறையாக சிகை திருத்தம் செய்யாத விஷால் காலத்து படம். 'படம் நல்லாயில்லை என்று சொன்னால் ஊர் உன்னை நம்பாது' என்று தற்போதைய ரசிகர்களுக்கு அழுத்தம் தரும் வகையிலான விளம்பர யுக்திகளால், ஒருவார காலமாக 'ஓேஹா...'வென வாழ்ந்து கொண்டிருக்கும் மதகஜராஜா.
விரையும் பேருந்திற்கு இணையாய் பைக்கில் நின்றபடி சாகசம் செய்து அறிமுகமாகிறார் விஷால். 'இதென்ன பிரமாதம்' என்பது போல், சந்தானத்தையும் அவர் மனைவியையும் அவர் சேர்த்து வைக்கும் அறிவுரை காட்சியில் துவங்கி, நம் ரசனையை இறுதிவரை இழுத்து அறுத்துப் போடுகிறார் இயக்குனர் சுந்தர் சி. துாள் படம் சுந்தர் சியை வெகுவாய் பாதித்திருக்கிறது போலும்; அதில் அரசியல்வாதியை விக்ரம் ஜெயிப்பது போல், இதில் விஷாலை ஜெயிக்க வைக்க அப்படியே திரைக்கதை பின்னி இருக்கிறார்!
அதில் ரீமாசென் செய்ததை இதில் வரலட்சுமி செய்கிறார்; கொழுகொழுவென அவர் காண்பிக்கப்படுவதால், வழக்கமான அவரது கொழகொழ பேச்சு தொந்தரவு இல்லை. தன் குட்டி குட்டி உடைகள் மாற்ற அவர் செல்லும் நேரங்களில், வாழைத்தண்டின் வாளிப்புடன் வந்து நெஞ்சம் நிறைக்கிறார் அஞ்சலி.
'இறந்தபின்னும் நல்ல கலைஞன் வாழ்வான்' என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மனோபாலா; சடலமாக அவர் நடிக்கும் காட்சிகள், 'லாஜிக்' மறக்கடித்து சிரிப்பூட்டுவது உண்மை! 'சிக்கு புக்கு ரயிலு...; டியர் லவ்வரு...' பாடல்கள் விஜய் ஆன்டனி இசையாலும், வரலட்சுமி - அஞ்சலியின் நெளிவுகளாலும் கண்ணடிக்கின்றன.
சுந்தர் சியின் வழக்கமான 'நண்டூறுது... நரியூறுது...' பாணி கதை; 'கிச்சுகிச்சு' அனுபவம் அற்றவர்கள் குலுங்கி சிரிக்கின்றனர்.
ஆக....
'என்னடா உங்க ரசனை' என நல்ல கலைஞர்களை நொந்து கொள்ள வைக்கும் வெற்றி!