PUBLISHED ON : ஜன 19, 2025

மற்றுமொரு காதல் கதை!
'குழந்தை வேண்டாம்' எனும் தன் விடாப்பிடியான நிபந்தனையால் காதலியை இழந்த சித்தார்த். 'ஆண்கள் வேண்டாம்' எனும் தன் துணிச்சலான முடிவால் செயற்கை கருத்தரிப்பில் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஸ்ரேயா. இவர்கள் காதலர்களாக ஒன்றுசேர திரைக்கதை என்ன செய்கிறது?
திரைக்கதை பெரிதாக ஒன்றும் செய்யாமல் போனதால், வித்தியாசமான இக்காதல் கதை சராசரி அளவிலேயே தேங்கிவிட்டது. 'தன்பாலின காதலர்கள் பெற்றோராக இருப்பது, குழந்தைபேறு மறுப்பை சாதாரணமாக அணுகுவது' உள்ளிட்ட புதிய கருத்துக்கள் சொல்லப்பட்டாலும், அவை கதையின் சுவாரஸ்யத்திற்கு உதவவில்லை!
சித்தார்த் - ஸ்ரேயா நட்பாகும் விதம், காதல் மலரும் தருணம், உறவு வளரும் சூழ்நிலைகள், இதன் பிறகான விரிசல் சார்ந்த காட்சிகளில் கற்பனை வறட்சி. கேவ்மிக் யு.ஆரியின் ஒளிப்பதிவால் மட்டுமே திரையில் புத்துணர்வு! சில முந்தைய காதல் திரைப்படங்களை நினைவூட்டுகிறது கிருத்திகா உதயநிதியின் இயக்கம்.
ரவி மோகன் - நித்யாவின் கூட்டணிதான் பலவீனமாக எழுதப்பட்ட பல காட்சிகளை காப்பாற்றுகிறது. தனக்குள் காதல் மலர்ந்ததை தோளில் சாய்ந்து கவிதையாய் உணர்த்தும் நித்யா மேனனின் நடிப்பு மனம் தொடுகிறது!
காதல் சார்ந்து இருவர் பழகிக் கொள்வதில் சமூகம் கண்டிருக்கும் முன்னேற்றத்தை சொல்லிய இடங்கள் நன்று! 'மறுமுறை நிகழும் சம்பவம் முதல்முறையை நினைவூட்டுவது இயல்பு' என்பதை உணராது, 'சர்ப்ரைஸ்' எனும் பெயரில் நிகழும் இறுதி நிமிட கூத்து சிறுபிள்ளைத்தனமாய் இருக்கிறது!
புதிய தடம் கண்ட கதையில் புதுமையில்லை.
ஆக...
அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டை முதல்வரிசையில உட்கார்ந்து பார்த்த திருப்தி இல்லை!