PUBLISHED ON : ஜன 26, 2025

கமகமக்கும் தன் சமையலைப் போலவே தன் ஞாபகங்களையும் விதவிதமாய் பரிமாறுகிறார் கவிஞர் கண்ணதாசனின் மகளும், சமையல் கலைஞருமான 68 வயது ரேவதி சண்முகம்.
பழக்கம் வழக்கமான ஞாபகம்
எனக்கு 15 வயசுல திருமணம்; அதுவரைக்கும் சமையலறை பக்கமே போனதில்லை. சமைக்கத் தெரியாததால நிறைய கேலி, கிண்டல்கள். அதை பொய்யாக்கணும்னு பத்திரிகை சமையல் குறிப்புகளை தேடித்தேடி படிப்பேன்.
என் மாமனார் 'தினமலர்' நாளிதழ்ல வர்ற முக்கிய விஷயங்களை அடிக்கோடிட்டு வாசிக்கத் தருவார். சிவசங்கரி, இந்துமதியின் எழுத்துக்கள் குடும்ப வாழ்க்கையைப் பற்றி நிறைய சொல்லித் தந்தது. வாசிப்பு பழக்கத்தால தான் பத்திரிகை, 'டிவி'யில சமையல் கலை பற்றி பேசுற தைரியம் வந்தது!
புத்தகங்கள் என்னைச் சுற்றி பரவிக்கிடக்க, அதுக்கு மத்தியில உட்கார்ந்து நான் வாசிச்ச காட்சி ஒரு ஓவியமா என் மனசுல பதிஞ்சிருக்கு. அந்த ஓவியம் ஞாபகத்துக்கு வர்றப்போ எல்லாம் இப்படி தோணும்...
'கத்துக்குற குணத்தை விட்டுடக் கூடாது!'
எனக்கு நான் அறிமுகமான நாள்
அலங்கார செடிகளை வாடகைக்கு தர்ற தொழிலை சின்ன அளவுல ஆரம்பிச்சேன். அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் அமைப்புல தலைவரா இருந்த அன்னபூர்ணா பிரசாத், 'எக்ஸ்போ - 1991' நிகழ்வுக்கு 1,500 அலங்கார செடிகள் வைக்கிற ஆர்டர் தந்தார். தான் பணியாற்றின நிறுவனத்துல செடிகள் வைக்கிற ஆர்டரை மேஜர் மணி தந்தார்!
இது ரெண்டுமே என் சக்திக்கு அப்பாற்பட்ட பணிகள். கைவசம் இருந்த எல்லா தொடர்புகளையும் பயன்படுத்தினேன். என் கணவரையும் ஒரு நண்பரையும் சேர்த்துக்கிட்டு எங்கெங்கோ பயணிச்சு செடிகளை கொண்டு வந்து சேர்த்தேன்!
இந்த நிகழ்வுகளுக்கு அப்புறம், 'ரேவதி... உன்னால இவ்வளவு உழைக்க முடியுமா'ன்னு எனக்கே என் மேல ஆச்சரியம்! 'நமக்குள்ளே இருக்குற அபரிமிதமான சக்தியை உணர சவாலான விஷயங்களை செய்யணும்'னு இந்த தருணத்துலதான் பரிபூரணமா தெரிஞ்சுக்கிட்டேன்.
இவர்களின்றி 'ஞாபகம்' இல்லை
தனிப்பட்ட வாழ்க்கையில நாம பரபரப்பா இருப்போம். அப்படி இல்லாத, பொறுப்புகள் பின்தொடராத இடம்னா நட்பு வட்டம் மட்டும்தான். சந்திரிகா அம்மா, வசந்தா அம்மா, விசாலாட்சி ஆச்சி, மதுரை துர்கா அம்மா, திருப்பூர் மணி... இவங்க எல்லாம் என் நண்பர்கள்.
எல்லா விஷயத்தையும் குடும்ப உறுப்பினர்கள்கிட்டே பகிர்ந்துக்கிற சூழல் எப்பவும் இருக்காது. அம்மாதிரியான தருணங்கள்ல இவங்களோட தான் என் உணர்வுகளை பகிர்ந்துக்குவேன். என் நட்பு வட்டம் ரொம்பவே பாதுகாப்பானது. 'கசப்புகளை மறக்க நண்பர்கள் தர்ற இனிமையான ஞாபகங்கள்தான் மருந்து'ங்கிறது என் எண்ணம். என் ஞாபகங்கள்ல நிறைய பசுமை இருக்க நண்பர்கள்தான் காரணம்.