PUBLISHED ON : மே 18, 2025

'சபாரி' உடை; 'குளிர் கண்ணாடி' தாங்கி நிற்கும் முகம்; 'விவேக் - ரூபலா' பாத்திரங்கள்; ஒவ்வொரு அத்தியாயத்திலும் விரியும் 'திக்... திக்...' நிகழ்வுகள்; இவையெல்லாம், 'க்ரைம்' நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் பற்றிய நம் ஞாபகங்கள். ராஜேஷ்குமாரின் ஞாபகங்களில் நமக்காக என்னென்ன இருக்கும்?
என் ஞாபக ஏட்டின் முதல் பக்கத்தில், அன்றைய விளையாட்டுகளும், நான் பார்த்த சினிமாக்களும்தான்! பம்பரம், கோலி, ஐந்தாங்கல் என நான் விளையாடிய விளையாட்டுக்கள் நிறைய நண்பர்களை தந்து என்னை உயிர்ப்பாக வைத்துக் கொண்டன! அன்றைய திரைப்படங்களால் ஒருநாளும் நான் எதிர்மறை உணர்வைப் பெற்றதில்லை!
வாசகர்களை அசவுகரியமாக உணர வைக்கும் சித்தரிப்புகள் என் படைப்பில் இல்லாததற்கு இந்த ஆரோக்கியமான ஞாபக அடித்தளமும் ஒரு காரணம். இதனால்தான் நல்ல வாசகர்களை என்னால் பெற முடிந்தது!
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சேரன் அதிவிரைவு ரயில் பயணம்; எதிரில் இருந்த 25 வயது இளைஞன் எனது 'ஊமத்தம் பூக்கள்' நாவலை எடுத்து வாசிக்கத் துவங்கினான். முழுவதுமாக வாசித்து விட்டு சிறு புன்னகை தவழ புத்தகத்தை மூடினான். நாவலில் என் புகைப்படம் பார்த்திருப்பினும் என்னிடம் அவன் எந்த உணர்வையும் வெளிக்காட்டவில்லை!
நான் அப்போது 1980 - 90களின் நாட்களை நினைத்துக் கொண்டேன்; நான் எங்கு சென்றாலும் ரசிகர்கள் என்னை சூழ்ந்து கொண்ட காலம் அது! அந்த இளைஞனிடம் நான் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. அன்று அவன் என்னை சாதாரணமாய் கடந்து தந்த அனுபவம் ரொம்பவே புதிதானது!
அவமானங்கள்இல்லாத ஞாபக ஏடுகளா?
அது, 1960ம் ஆண்டு; பள்ளி சுதந்திரதின விழா; சிறப்பு விருந்தினர் ஏற்றவிருந்த தேசியக்கொடியை விளையாட்டாக நான் ஏற்றிவிட, பள்ளி தலைமை ஆசிரியரின் கடும் கோபத்திற்கு ஆளாகி, விழா முடியும்வரை முழங்கால் போட்டு நின்றேன். அதே பள்ளியில், 1997ம் ஆண்டு சுதந்திரதின பொன்விழாவிற்கு சிறப்பு விருந்தினராய் அழைக்கப்பட்டேன்; அன்று, தேசியக் கொடி ஏற்றினேன்!
காயம் தந்த நிகழ்விடத்தில் பெருமை மிகு ஞாபகம் உருவாக காலம் எனக்கு அளித்த வாய்ப்பாகவே அன்றைய நாளை உணர்ந்தேன்! 'சார்... என் பேரு அருள்மொழி செல்வி. கட்டட வேலைக்குப் போற இடத்துல மதியம் ஓய்வு நேரத்துல உங்க கதைகளை வாசிப்பேன். எனக்கு காலேஜ் போய் படிக்கணும்னு ஆசை; ஆனா, முடியாம போயிருச்சு. உங்க கதையில வர்ற ஏதாவது ஒரு படிச்ச பொண்ணுக்கு என் பேரு வைக்கிறீங்களா; நானே படிச்ச மாதிரி சந்தோஷப்படுவேன்' என ஒரு வாசகி என்னிடம் கேட்டுக் கொண்டார்.
அதன்பிறகு நான் எங்குமே பார்க்காத அம்முகத்தை இன்னமும் ஞாபகத்தில் ஏந்திக் கொண்டிருக்கிறேன்; 'அருள்மொழி செல்வி ஐ.ஏ.எஸ்.,' தலைப்பில் ஒரு நாவல் எழுத திட்டமிட்டிருக்கிறேன்.