PUBLISHED ON : ஜன 25, 2026

'வலசை போற மாட்டு மந்தைங்க புல்லை மட்டும் மேய்ஞ்சுட்டுப் போறது இல்ல; போற
பாதையெல்லாம் புது காட்டையும் விதைச்சுட்டுப் போகுதுங்க' - தென்தமிழகத்தின்
மேற்கு மலைத்தொடரை ஒட்டிய ஊர்களில், கிடை மாடுகளுடன் அலைந்து திரிந்த
வாழ்க்கையை வார்த்தைகளாக்குகிறார்...
மூத்த கீதாரி ரா மகிருஷ்ணன்; கீதாரிகளின் மத் தியில் இவரது பெயர் புலிக்குளம் கிருஷ்ணன்; இந்த புலிக்குளம் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது.
அதென்ன கிடை, கீதாரி?
ஆடு, மாடுகளை வேளாண் நிலத்துல அடைச்சு அதுகளோட கழிவுகளை உரமாக்குறதுக்கு பேரு கிடை. 'மந்தை எங்கே மேயணும்; கிடை எங்கே போடணும்'னு ஆடு, மாடு, மேய்ச்சல் காடுகள் பற்றி நிறைய தெரிஞ்சவன் கீ தாரி.
வலசை பயணம்
வைகாசி, ஆனியி ல ஊர் சாமிக்கு பொங்கல் வைச்சுட்டு ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபா ளையம் பக்கம் மந்தைகளை ஓட்டிட்டுப் போவோம். அப்போ, அங்கே கோடை அறுப்பு முடிஞ்சு உரத்துக்கு நிலம் தயாரா இருக்கும். புரட்டாசி, ஐப்பசி மழையில மந்தைங்க மலை மேல மேயும்; ராத்திரிக்கு அடிவாரத்துல கிடை தங்கும்!
மந்தைகளை ஓட்டிட்டுப் போற இந்த பயணத்துக்கு பேருதான் வலசை. ஒவ்வொரு கீதாரிக்கும் தனியா வலசை பாதை உண்டு. 'ஆடு மாடுங்க கால்பட்ட இடமெல்லாம் எங்க காடுங்க; தாகம் தணிச்ச கண்மாய் எல்லாம் எங்க கண்மாய்ங்க'ன்னு ஒரு காலம் இரு ந் தது. இன்னைக்கு மேய்ச்சல் காடுகள் காணாம போயிட்டு இருக்கு!
காசி பாண்டியன் எனும் மனிதன்
அப்பா ஒருதடவை என் கிட்டே கலந்துக்காம கிடை மாடுகளை விலை பேசிட்டாங்க. தென்காசியில இருந்து மாட்டு வியாபாரி காசி பாண்டியன் வந்துட்டாரு. அவர்கிட்டே போய், 'ஊருக்குள்ளே 'பசுக்காரன் குடும்பம்'னு எங்களுக்கு ஒரு பேரு இருக்கு; யாரையும் கேட்காம அப்பா இந்த முடிவை எடுத்துட்டாரு'ன்னு தயங்கி தயங்கி சொன்னேன்.
'அவ்வளவுதானே...'ன்னு சொன்னவர், 35 மாடுகளை எனக்கு தந்துட்டு, 'போதுமாடே'ன்னு சிரிச்சுக்கிட்டே கேட்டுப் போனாரு பாருங்க... நான் ஜென்மத்துக்கும் மறக்க மாட்டேன்; அவரு ரொம்ப பெரிய மனுஷன்!
மழை நாளும் மாட்டு கிடையும்
நல்ல மழை நே ரம்; ராஜ பாளையத்துல கிடை கிடைக்காம மேட்டு நிலத்துல மாடுகளை அடைச்சிருந்தேன். இதைப்பார்த்த பஞ்சு மில் மேனேஜர் ஒருத்தர், மில்லுல இருந்த தென்னந் தோப்புல கிடை போட அனுமதி வாங்கிக் கொடுத்தாரு; ஒரு நாளைக்கு, 1,000 ரூபாய் கூலி; ஒருமாசம் மாடு அடைச்சேன். அந்த மனுஷனையும் வாழ்க்கையில மறக்க முடியாது!
கடந்த 2012ம் ஆண்டு புலிக்குளம் மாடுகளை 'இந்திய உள்நாட்டு இனம்' என அங்கீகரித்த தேசிய விலங்கியல் மரபணு வள நிறுவனம், நாட்டு மாட்டு இனத்தினை வளர்த்து பாதுகாத்து வருவதற்காக, 2013ல் விருது தந்து கிருஷ்ணனை கவுரவித்துள்ளது.
'10 வயசுல மாடு மேய்க்க வந்தேன்; என் அனுபவத்துல, 'மேய்ச்சல்'ங்கிறது தொழில் மட்டுமில்ல... அது வாழ்க்கை' என்கிறார் 62 வயது கிருஷ்ணன்.

