
ஊர் செழிக்க உயிர்க்கொடை தந்தவன்!
மூங்கிலில் தன் ஜடாமுடியை இழுத்து கட்டியதால் துண்டான தலையோடு அருள்கிறார் ஈஸ்வரப்பன்; வலதுகை வாளேந்தி நிற்க, இடது காலை குத்திட்டு அமர்ந்து நடுகல் சிற்பமாகி இருக்கிறார். திருப்பத்துாரின் ஆம்பூரில் இருந்து 10 கி.மீ., தொலைவில், விண்ணமங்கலம் ஏரி மண்டபத்தில் இருக்கிறது ஐந்தடி உயர, மூன்றடி அகல இந்நடுகல்!
'யாக்கை மரபு அறக்கட்டளை' சொல்வது...
கல்வெட்டு அடிப்படையில், முதலாம் பராந்தக சோழனின் அரசவை அதிகாரி இடக்காத்தரையனின் தம்பியான இடக்காத்தரையட்டாடியன், சமூக நலனுக்காக துாங்கு தலை கொடுத்தார்!
ஊர்க்காரர்கள் சொல்வது...
இருபது கி.மீ., தொலைவிலுள்ள அரசந்தாபுரம் ஊர்க்காரர் ஈச்சப்பன். சகோதரிகளுடனான சண்டையால் இங்கே தஞ்சம் அடைந்தவரை, 'காயத்தழும்பு' ஒன்று காட்டிக் கொடுக்க, சகோதரிகளின் முகம் காண பிடிக்காமல் கழுத்தறுத்து மாண்டார்!
பூசாரி சரவணன் சொல்வது...
பாலாறு, கானாறு நீரால் ததும்பி பாசனத்திற்கு உதவும் 300 ஏக்கர் விண்ணமங்கலம் ஏரியை கட்டமைக்க, தன் உயிரை பலி கொடுத்தவர் எங்கள் ஈச்சப்பன்!
நிகழ்ந்தது எதுவாயினும், 'ஈஸ்வரப்பன்' எனும் நடுகல் ஆகி நிற்கும் ஈச்சப்பனை, 'இது எங்க சாமி' என உரிமையோடு தேடி வந்து வழிபடுகின்றனர் விண்ணமங்கலம் சுற்றுவட்டார கிராம மக்கள்.