PUBLISHED ON : மார் 02, 2025

'சம்பாதிச்ச பணத்தை செலவு பண்ணாம சேர்த்து வைக்கணும் சம்பத்து; ஆசைப்படுறது எல்லாத்தையும் வாங்கிட்டா அவசியமானதை செய்ய முடியாம போயிரும்யா!'னு சொல்வார் எங்க மாமா ராமசாமி.
சென்னை, கே.கே.நகரின் உச்சி வெயில் நேரம்; 80 வயது வரை வாழ்ந்த தன் தாய்மாமா பற்றி சம்பத் பேசப்பேச மனதிற்குள் சாரல் விழும் சுகம்!
'ராட்டினம்' ராமசாமி
'திண்டிவனம், குடிசைப்பாளையம் கிராமம் என் தாய்மாமாவுக்கு பூர்வீகம். குடும்பத்தோட ஒரே ஆண் வாரிசு அவர். அஞ்சு ஏக்கர் விவசாய நிலத்தை வித்து நாலு அக்காவுக்கும் ஒரு தங்கச்சிக்கும் கல்யாணம் முடிச்சதுக்கு அப்புறம் சென்னைக்கு வந்து ராட்டினம் போட்டு வாழ ஆரம்பிச்சார். எனக்கு படிப்பு ஏறாததால 15 வயசுல அவர்கிட்டே வந்தேன்!
'ஊர் ஊரா ராட்டினம் தள்ளிட்டுப் போற இந்த பொழப்பு என்னோட போகட்டும் சம்பத்து. உனக்கு மாசம் 210 ரூபாய் சம்பளத்துல ஒரு பியூன் வேலை பார்த்து வைச்சிருக்கேன்னு சொல்லி ஒரு கம்பெனியில சேர்த்து விட்டார். அந்த வேலை என் மனசுக்கு ஒட்டலை; மாமாகிட்டேயே வந்துட்டேன். அவர் பசங்க தட்டுல என்ன இருக்கோ அது என் தட்டுலேயும் இருக்குற மாதிரி பார்த்துக்கிட்டார். இன்னைக்கு ராட்டினத்தை நான் மட்டும் தள்ளிட்டு போறப்போ...' - சம்பத்தின் குரல் உடைகிறது!
'குழந்தைகளோட உடல் எடையை கணிச்சு ராட்டினத்துல ஏத்துறது, அவங்க பயப்படாத வேகத்துல ராட்டினத்தை சுத்துறதுன்னு இந்த தொழில் நுணுக்கத்தை எனக்கு கத்துக் கொடுத்தது என் மாமாதான்! அப்போ, தலைக்கு 50 பைசா வாங்கினோம். இப்போ, 30 ரூபாய் வாங்குறேன். ஆனா, என் மாமா கடைசி வரைக்கும் 10 ரூபாய்க்கு மேல வாங்கினதில்லை. ஒருநாள் அதைப்பத்தி கேட்டதுக்கு...
'30 ரூபாய்னு சொன்னா பெத்தவங்க குழந்தையை திருப்பி கூட்டிட்டு போயிடுறாங்க சம்பத்து. ராட்டினத்துல ஏறப்போறோம்னு ஆசையில வர்ற குழந்தைங்க ஏமாந்து போறதை பார்க்க கஷ்டமா இருக்கு'ன்னார். அவர் இப்படித்தான்; எதுலேயும் நிம்மதியை தேடுற மனுஷன்!
'அத்தை வைக்கிற கிள்ளிப்போட்ட சாம்பார்னா அவருக்கு ரொம்ப இஷ்டம். ஒரு வருஷத்துக்கு முன்னால பேருந்து மோதி இறந்துட்டார்!' சம்பத்திடம் அடர் மவுனம்; அருகிருந்த ராமசாமியின் ராட்டினம், 'நான் எங்கேயும் போகலை சம்பத்து' என்றவாறு அம்மவுனம் கலைக்க முயற்சிப்பதாய் தோன்றியது.