PUBLISHED ON : மார் 02, 2025

180 வினாடிகள்; சினிமா பித்துப் பிடித்த இன்றைய இளைஞனும், அப்பித்தம் தெளிந்திருக்கும் அன்றைய இளைஞனும்...
'ண்ணா... என் தலைவன் பேச்சு எப்படி?'
'செம... 'பக்கத்துல இருக்குற ஆந்திர மாநிலத்தோட முதல்வர் சந்திரபாபு நாயுடு தன் அமைச்சர்களோட செயல்திறனை மதிப்பிட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடுறாரு. அதுல தனக்கு 6வது இடம்னு சொல்றாரு. இங்கே, இப்படியான ஒரு தரவரிசைப் பட்டியல் நான்கு ஆண்டுகள்ல வெளியாகி இருக்குதா'ன்னு ஆழமா கேட்டாரே... வேற லெவல்யா!'
'இல்லீங்ணா... என் தலைவன் அப்படி எதுவும் கேட்கலையே...'
'என்னப்பா சொல்றே... 'உணவு தானிய சேமிப்பு கிடங்குகளில் பராமரிப்புக்கு வழியின்றி நிரம்பி வழியும் உணவுப் பொருட்களை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்'னு 2010ல் உச்ச நீதிமன்றம் சொன்னதையும், 'அப்படியெல்லாம் இலவசமாக தர முடியாது'ன்னு அப்போதைய மத்திய அரசு மறுத்ததையும், 'நாங்கள் கொண்டுவந்த தேசிய உணவு பாதுகாப்பு சட்ட அடிப்படையில்தான் இப்போது ரேஷனில் ஐந்து கிலோ அரிசி, கோதுமை வழங்கப்படுகிறது'ன்னு சமீபத்துல சோனியா காந்தி சொன்னதையும் முடிச்சு போட்டு கிள்ளுனாரு பாரு... கிறங்கிட்டேன் போ!'
'ம்ஹூம்... இதையும் அவரு சொல்லலை!'
'அப்படியா... குற்றவாளிகளாக அறிவிக்கப்படும் அரசியல்வாதிகள், தற்போதைய சட்டப்படி தண்டனை காலம் முடிந்த ஆறு ஆண்டுகளுக்குப் பின் தேர்தலில் போட்டியிடலாம்னாலும், என் கட்சியில் அப்படியான வாய்ப்பை நிச்சயம் வழங்க மாட்டேன்'னு கர்ஜனை பண்ணினப்போ என் நெஞ்சு பொங்கிருச்சுப்பா!'
'என்னங்ணா சொல்றீங்க... இப்படியெல்லாம் என் தலைவன் பேசவே இல்லையே...'
'அட என்னய்யா நீ... பின்னே அவரு என்னதான் சொன்னாரு?'
'என் நெஞ்சில் குடியிருக்கும்...'னு ஆரம்பிச்சாரு; 'வாட் ப்ரோ...'ன்னு கேட்டாரு; 'பாசிசம், பாயசம்'னு அடுக்கினாரு... அவ்வளவுதான்!'
'இதுக்கெல்லாம் நீ என்ன பண்ணுனே?'
'விசிலடிச்சேன்!'
'அதானே... நீ மூளைக்காரன்டா!'