PUBLISHED ON : மார் 02, 2025

சித்து விளையாட்டு காட்டும் திரைக்கதை!
திரைப்பட கலை இயக்குனராக முயற்சிக்கும் அகத்தியன், புதுச்சேரியில் பிரெஞ்சு காலத்து பாழடைந்த மாளிகையை பேய் பங்களாவாக வடிவமைத்து காசு பார்க்கிறான். ஒருகட்டத்தில், 80 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாளிகையில் நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் தொடர்பு இருப்பதாக உணர்பவன், அதற்கான தேடலில் இறங்குகிறான். இதற்குப்பின் சித்தர்கள், மூலிகை மருந்து, கிரகங்களின் நேர்கோட்டு சந்திப்பு, பூர்வ ஜென்மம் ஆகியவற்றை கோர்த்து கதையை உருட்டி பிசைந்திருக்கின்றனர்!
'அந்த இடத்தை கடக்கும்போது செயற்கைகோள் செயலிழந்துவிடும்; இதை குடித்தால் புற்றுநோய் சரியாகிவிடும் உள்ளிட்ட 'வாட்ஸ்ஆப்' வதந்திகளை நினைவூட்டும் வகையிலான தகவல்கள், திரைக்கதையில் நிறைய எட்டிப் பார்க்கின்றன. அவை காஞ்சனா, அரண்மனை படங்களில் வருவதுபோல கற்பனைகளாக அல்லாமல் நிஜம்போல வர்ணிக்கப்படுகின்றன!
மாந்திரீகம், ஆன்மிகம், வரலாறு, விஞ்ஞானம் என எல்லாவற்றில் இருந்தும் ஒரு சிட்டிகை துாவியிருக்கிறார் இயக்குனர் பா.விஜய். 'இதுபோதாது' என ஜாதி, திராவிடம், பாரதிதாசன் என இழுத்து யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்!
கருணாநிதியின் எழுத்தில் இளைஞன் படத்தில் நடிகராகவும் பரிணமித்த பா.விஜய், அரசின் இலவச திட்டங்கள் மக்களை அடிமைகளாக வைத்திருக்கும் என்று சுட்டிக்காட்டத் தவறவில்லை. இந்த விமர்சனத்திற்கு இடையே கதையில் வரும் 'அம்மா' சென்டிமென்ட், 'இது எதன் குறியீடு' என்று யோசிக்க வைக்கிறது!
சித்தார்த்தன் எனும் கோட் சூட் அணிந்த சித்த வைத்தியராக அர்ஜுன், சுழற்றியடிக்கும் கதையில் தாக்குப்பிடித்து நிற்கிறார். ப்ளாஷ்பேக் கெட்டப், 'ஜீவாவுக்கு வரலாற்று கதைகளில் வாய்ப்பளிக்கலாம்' எனும் நம்பிக்கையை தருகிறது.
திகில், வரலாறு, மாயாஜாலம் என எதற்குள்ளும் உட்காராமல் குட்டிக்கரணம் அடிக்கிறது படைப்பாக்கம்.
ஆக...
'என் இனிய பொன் நிலாவே...' 'ரீமேக்' பாடல் கூட ஆறுதல் தரவில்லை!