வாழ 2 பயோபிக் ஆப் எ பில்லியன் ப்ரோஸ் (மலையாளம்)
வாழ 2 பயோபிக் ஆப் எ பில்லியன் ப்ரோஸ் (மலையாளம்)
PUBLISHED ON : ஏப் 12, 2026

நான்கு இளசுகளின் சரி - தவறுகள்
அரும்பு மீசை முளைக்கும் வயதில் பின்னிப் பிணைகிறது ஹஷிர், ஆலன், அஜின், விநாயக் இடையிலான நட்பு; அன்பு பாராட்டாத பள்ளி ஆசிரியர்கள் மற்றும் குழந்தை வளர்ப்பில் கோட்டைவிடும் பெற்றோர்களால் நண்பர்களின் குணம் தடம் புரள, நால்வரும் தலை துாக்கினார்களா?
கடந்த பாகத்தில் '90ஸ் கிட்ஸ்'களை வைத்து சொல்லப்பட்ட கதை, இப்பாகத்தில் 'ஜென் இஸட்'களை மையம் கொண்டு நகர்கிறது. தந்தை வைக்கும் பொறி ஒன்றில் தனயன் சிக்கியபின், 'மகனை மயக்கியது பொறியில் தான் வைத்த தேங்காய் துண்டல்ல' என்பதை தந்தை அறியும் அந்த வெடிச் சிரிப்பு காட்சிக்காகவே, தாராளமாய் இப்படம் பார்க்கலாம்; '90ஸ் கிட்ஸ் - ஜென் இஸட்' இடையிலான தலைமுறை இடைவெளியாகக் கூட இக்காட்சியை நாம் அணுகலாம்.
பள்ளிகளில் மாணவர்களின் மனதை வலிமையாக்கும் வசதியற்ற மைதானங்களுக்கும், மாணவர்களின் போதைப் பழக்கத்திற்குமான தொடர்பை விளக்கியதற்கு பாராட்டு. வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறக்க வைக்கும் பள்ளிக்காலத்து காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் சிந்திக்கவும் வைக்கின்றன.
நடுத்தர, அடித்தட்டு குடும்ப பிள்ளைகளின் சூழலில் இருந்து எழுதப்பட்ட திரைக்கதை, சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் அப் பிள்ளைகளின் வளர்ச்சியில் செலுத்தும் எதிர்மறை தாக்கத்தை பல இடங்களில் சொல்லிச் செல்கிறது.
'குழந்தை பருவத்தில் மனம் கனத்து சிந்தும் கண்ணீர், காலம் கடந்தும் வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் வடிந்து கொண்டேதான் இருக்கும்' என்பதை நண்பர்கள் வழியே உணர்த்தும் போது நம் விழிகளும் கசிகின்றன.
தம்பிக்கு அண்ணன் தந்தையாவது, அண்ணனுக்கு தம்பி மூத்தவனாக மாறுவது, தந்தையின் மடி சாய்ந்து அவர் முகத்தை மகன் பார்ப்பது, 'உனக்கு நான் பண்ணாம வேற யாருடி பண்ணுவா' என்று தங்கையிடம் அண்ணன் உருகுவது என, தடம் மாறா எறும்பு களாக காட்சிகள் வரிசைகட்டுவதால் கரைகிறது நம் மனம்.
ஆக....
நண்பா, நண்பிகள் தரப்போவது என்னவோ... இந்த நண்பர்களுக்கு ரசிகர்கள் தந்திருப்பது வெற்றி
