நாங்க என்ன சொல்றோம்னா...: அன்போடு கண்மணி (மலையாளம்)
நாங்க என்ன சொல்றோம்னா...: அன்போடு கண்மணி (மலையாளம்)
PUBLISHED ON : பிப் 09, 2025

உலை வாயை மூடலாம்; ஊர் வாயை...?
நகுலன் - ஷாலினி திருமணத்தில் துவங்குகிறது 120 நிமிட கதை. 15வது நிமிடத்தில் 'விசேஷம் உண்டா' என்கிறது ஊர் வாய். முதலில் சங்கோஜம் கொள்ளும் ஷாலினி, 30வது நிமிடத்தில் அப்படி கேட்ட சொந்தக்காரி மீது கொதிக்கும் டீயை ஊற்ற, மீதமிருக்கும் 90 நிமிடங்களும் ஊர் வாயை அடைக்கும் பஞ்சாயத்து!
குழந்தை இன்மையால் மனம்வாடும் தம்பதியர் கதையில் என்னென்ன காட்சிகள் இருக்கும்; கோவில், ஜாதகம், உறவினர் வீட்டு விசேஷம், மருத்துவமனை, அலுவலகம், டீ கடை, நண்பர்களின் கருத்து, மூலிகை மருந்து மற்றும் ஒட்டியிருக்கும் இரட்டை வாழைப்பழம் உண்பது வரை ஒன்றுவிடாமல் ரவுண்டு கட்டி திரைக்கதை எழுதி இருக்கின்றனர்!
ஒரே விஷயத்திற்குள் சுழலும் கதைதான் என்றாலும், ஷாலினியிடம் படிப்படியாக ஏற்படும் உணர்வு மாற்றங்களை கவனப்படுத்தியது சிறப்பு. 20 ஆண்டுகளாக குழந்தைபேறு வேண்டி தீவிரமாக முயற்சிக்கும் தம்பதியரை இயக்குனர் லிஜு தாமஸ் இந்த அளவிற்கு மகிமைப்படுத்தி இருக்க வேண்டாம்!
வெள்ளந்தி மனிதர்களின் வாழ்விடமாக கிராமத்தை பல படைப்புகள் காட்டியிருக்க, இதில் அதன் மறுபக்கத்தை காட்டி இருக்கின்றனர். நாவில் தேள் கொடுக்குடன் நமது அக்கம் பக்கத்தில் நடமாடும் பல மனிதர்களை இதில் நிழல் வடிவில் பார்க்கலாம். அந்த இடங்களில் வெளிப்படும் நகைச்சுவைகள், நம் வாய்க்கு வலி கொடுக்காமல் சிரிக்க வைக்கின்றன!
வீட்டிற்குள் நிகழும் சம்பவங்களை சுற்றத்துடன் முடிச்சு போட்டு கதை சொல்வது மலையாள படைப்பாளிகளுக்கு கைவந்த கலை. ஆனால், இம்மாதிரியான படைப்புகளை தொடர்ந்து பார்க்கும் தமிழ் ரசிகனுக்கு இப்படைப்பு பத்தோடு பதினொன்று.
ஆக...
விருந்தில் உப்பு புளி காரம் சரியாக இருந்தும் என்னவோ குறைவது போன்ற உணர்வு.