நாங்க என்ன சொல்றோம்னா...: பேபி கேர்ள் (மலையாளம்)
நாங்க என்ன சொல்றோம்னா...: பேபி கேர்ள் (மலையாளம்)
PUBLISHED ON : பிப் 22, 2026

பழம் நழுவி பாலில் விழும் கதை; ஆனால், 'நாகரிக' கதை
பிறந்த சில மணிநேரத்தி ல் காணாமல் போகும் குழந்தையை போலீஸ் தேடுகிறது; குழந்தையை துாக்கிச் சென்றதற்கான உணர்வுப்பூர்வமான காரணம் சொல்லப்படுகிறது; குழந்தையின் பசியாற்றப்படுகிறது; மறுபடியும் குழந்தை காணாமல் போகிறது; மீண்டும் அது கிடைப்பது மு தலில் தொலைத்தவரிடமா... இரண்டாவதாக தொலைத்தவரிடமா என்பதை தடதடக்கும் ரயில் பயணம் நமக்குச் சொல்கிறது.
'குழந்தை பசியாறிவிட்டது' என்பதை அதன் கால் விரல்கள் அசைவின் மூலம் புரிய வைக்கும் கற்பனை யும் ஒளிப்பதிவும், பிஞ்சு பாதங்கள் நெஞ்சில் நடக்கும் சுகம் தருகின்றன! சப்பை மேட்டரை இப்படி சாகசம் போல் ரசிக்கும் மனநிலை இருந்தால், 'க்ளைமாக்ஸ்'வரை அவ்வப்போது 'ஆஹா...' சொல்லலாம்!
நிவின் பாலி இதில் குழந்தை தொலைய காரணமான மருத்துவமனை ஊழியர். தான் செய்த தவறை அடுத்தவர் மீது இறக்கி வைத்தபின் குற்றவுணர்வை வெளிக்காட்டு வதிலும், 'தாயுமானவன்' உணர்வில் குழந்தையைத் தேடும் அக்கறையிலும் நடிப்பெனத் தெரியாத அளவிற்கு ஆச்சரியப்படுத்துகிறா ர்.
அதீத உப்பிட்ட சாம்பாரை சரிசெய்யும் உருளைக்கிழங்குகள் போல் லிஜோமோல் ஜோஸ், சங்கீத் பிரதாப் உள்ளிட்ட பாத்திரங்கள்; அந்த உப்பு போல் போலீஸ் அதிகாரி பாத்திரம். அப்பாவின் பனியன் போட்டுக்கொண்டு அவரது காலணி அணிந்து திரியும் குழந்தையாய் திரைக்கதையின் முதல்பாதி அலைகிறது என்றாலும், இரண்டாம் பாதியில் குட்டி வேட்டி சட்டையில் அம்சமாய் ஓடி விளையாடுகிறது.
'இது எப்படி சாத்தியம்; இந்த காட்சி எதற்காக; இதற்குமுன் இது வேறு மாதிரி இருந்ததே' - இப்படி எல்லாம் தொடர் கேள்விகளை எழும்ப வைக்கும் அக்கறையற்ற இயக்கம் இறுதிவரை இருப்பினும், 'தாய் - சேய்' பாசம் சொல்லும் க்ளைமாக்ஸ், கடந்து வந்த கசப்புகளை மறக்கச் செய்கிறது.
ஆக...
'உப்புமா' பிரியர்களை 'அடடா... செம' என சொல்ல வைக்கும் படைப்பு

