PUBLISHED ON : ஜூலை 13, 2025

ச்சே... எப்படியான எழில் இப்படி ஆயிட்டாரே!
'தேசிங்குராஜா 2க்கு ஒரு டிக்கெட் கொடுங்க' என்று கேட்டதன் விளைவு... 133 நிமிடங்களுக்கு கண்ணிவெடி மீது நிற்க வைத்து, சுற்றிலும் பாம்பு, பூரான், தேளை உலவவிட்டதற்கு நிகரான அனுபவத்தை வழங்கி விட்டனர். நம் நேரத்தை அரிக்கும் கரையான்களான 'ரீல்ஸ், டிக் டாக், ஷார்ட்ஸ்' வகையறாக்களுக்கு சவால் விடுகிறது படம்!
சிங்கம் புலி, சாம்ஸ், ரவிமரியா என இயக்கு னர் எழிலின் 'டிரம்ப் கார்டு'கள் கூட செல்லா காசுகளாக ஆக்கப்பட்டுள்ளனர். 'ஆணுக்கு பெண் வேடமிட்டாலே அது நகைச்சுவை' என்று நம்பும் அளவிற்கு பயங்கர அப்டேட்டாக இருக்கிறது ஒவ்வொரு சிந்தனையும்!
'சத்யா' எனும் பாத்திரத்தில் தாடி வைத்த உயர்ந்த இளைஞர்; அவருக்காக ஒரு சண்டை, டூயட் வைத்திருக்கின்றனர்; இதன்பொருட்டு பார்வையாளர்களுக்கு செய்த பாவங்களை சித்ரகுப்தர் கழித்துக் கொள்ள வேண்டும். 'கெட்டதிலும் நல்லது இருக்கும்' என்பதெல்லாம் சுத்தப்பொய்; 'கெட்டதில் நல்லது இருந்தால் அதுவும் கெட்டு விடும்' என்பதே மெய்; உதாரணம், இப்படத்திற்கு இசை வித்யாசாகர்!
'விழலுக்கு இறைத்த நீர் போல விமலின் முயற்சிகள்' என்று ரைமிங்காக சொல்லக்கூட முடியாத அளவிற்கு விமலின் பங்களிப்பு; ஜான் ஏறினால் முழம் சறுக்கு வதே விமலுக்கு வாடிக்கையாகி விட்டது!
ஒருகாலத்தில் தன் படைப்பை காண வரும் ரசிகனை நெகிழ்வாக வழியனுப்பி கொண்டிருந்தார் இயக்குனர் எழில். பின்னர் சிரிப்புடன் வழியனுப்பினார். இதில், 'நான் இருக்குற பக்கம் இனி வருவே...' என்றபடி 'நறுக்'கென்று குட்டு வைத்து விரட்டி இருக்கிறார்.
ஆக....
ஒருவரை கம்பத்தில் கட்டி வைத்து வெளுத்ததாக நாளிதழில் வாசித்ததை இன்று அனுபவித்தேன்!