நாங்க என்ன சொல்றோம்னா...: காளிதர் லாபட்டா (ஹிந்தி)
நாங்க என்ன சொல்றோம்னா...: காளிதர் லாபட்டா (ஹிந்தி)
PUBLISHED ON : ஜூலை 13, 2025

தனக்குள் தொலைந்த தன்னை கண்டடையும் ஒருவனது கதை!
ஞாபக மறதி உள்ள காளிதரை கும்பமேளாவில் கழற்றி விடுகின்றனர் அவரது சகோதரர்கள். ஆதரவின்றி திரியும் அவருக்கு ஆதரவற்ற சிறுவன் பல்லு நெருக்கமாகிறான்.
பல்லுவின் உதவியால் தன் சின்னச்சின்ன ஆசைகளை சிறகடிக்க வைக்கிறார் காளிதர்.
இவர்களின் பிணைப்பால் இருவர் வாழ்விலும் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
கொஞ்சம் தவறியிருந்தால் காளிதருக்கான அவரது தம்பிகளின் 'காணவில்லை' போஸ்டர், 'கண்ணீர் அஞ்சலி' போஸ்டராக மாறியிருக்கும் நகைச்சுவையோடு துவங்குகிறது திரைக்கதை. 'காணாமல் போன ஒருவரை கண்டுபிடித்து கொடுத்தால் புத்திர பாக்கியம் கிட்டும்' என்று ஜோதிடர் சொன்ன பரிகாரத்தை நம்பி காளிதரை தேடுபவரின் செயல்கள் நகைச்சுவை எண்ணெயில் விழுந்த கடுகுகளாக நாலாபுறமும் தெறிக்கின்றன!
மவுனங்களால் காளிதரின் மனநிலையை கடத்துகையில் அபிஷேக் பச்சன் பச்சக்கென்று நம் மனதில் ஒட்டிக் கொள்கிறார். நகைச்சுவையில் இருந்து உணர்ச்சிகர நிலைக்கு திரைக்கதை தடம் மாறியதும் மொத்த படமும் அவர் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடுகிறது. சிறுபிள்ளைத்தனம் இல்லாத பல்லுவாக வரும் சிறுவனது நடிப்பும் சிறப்பு!
பிரியாணி சாப்பிடுவது, 'கோட் சூட்' அணிவது உள்ளிட்ட காளிதரின் ஆசைகள் யாவும் கதைக்கு அர்த்தம் சேர்ப்பதாக இல்லை. தமிழில் வெளியான கே.டி (எ) கருப்புதுரை படத்தின் ரீமேக்கான இதில் மத்திய பிரதேசத்தின் கிராமங்களை நிறைவாக காண முடிகிறது!
அங்கொன்றும் இங்கொன்றுமாக தனித்தனி காட்சிகளாக ஈர்க்கும் படைப்பை அபிஷேக் பச்சன் தோள் கொடுத்து கரை சேர்த்திருக்கிறார். கதையின் ருசிக்காக படம் பார்ப்பவர்கள் தேர்வு செய்யலாம்.
ஆக....
'இந்த கதையை மிஸ் பண்ணிட்டனே...' என அபிஷேக்கின் தந்தையை வருந்த வைக்கும் படைப்பு!