PUBLISHED ON : ஏப் 27, 2025

ஆஹா... வந்துட்டான்யா... வந்துட்டான்யா...
சுந்தர் சி யால் கமகமக்கும் சிங்காரம்; சிங்காரத்தால் மணமணக்கும் கேங்கர்ஸ்; 'டைட்டில்' முடிவதற்குள் ஒரு கைக்கடிகாரம் கதைக்கு காரணமாகிறது. எங்கேயும் நொண்டிவிடாதபடி, இடைவேளை வரை சிங்காரத்தின் உதவியுடன் திரைக்கதையை இழுத்து வந்து விடுகிறது அக்காரணம். அதற்குப்பின் சிங்காரம் மூக்கொழுகி அழும் வகையில் சொல்லப்படும் கதை, 'க்ளைமாக்ஸ்' வரைக்குமான திரைக்கதைக்கு காரணமாகி விடுகிறது!
சிங்காரத்தை மூக்கு சிந்த வைத்த அக்கதையில், அற்ப ஆயுசு கொண்ட அழகு வானவில் போல வாணிபோஜன் வந்து மறைவது... கோடை மழை எழுப்பும் மண் வாசனை! வானவில் மறையக் காரணமானவர்களை சுந்தர் சி வேட்டையாடும் ஒருவரி கதை; இதற்கு சிங்காரம் துணை!
சார்லஸ் வேடத்தில் மீசை தொலைத்து சிங்காரம் அலைகையில் சிரிப்பு பூகம்பம். 'கீ எங்கே' என்று சிங்காரம் கேட்டதும் ஒலிக்கும் சம்பவத்திற்கு சிரிக்காதவன்... பிணம்! 'இதுவரை என்னென்ன அடித்ததில்லை' என்பதை சிங்காரம் மூச்சு விடாமல் சொல்லி முடிக்கையில், ஒவ்வொரு இருக்கைக்கும் வந்து 'ஐயாம் பேக்' என்று சொல்லிவிட்டுப் போகிறது வைகைப்புயல்!
'சுந்தர் சி படம்னாலே சிரிக்க வைக்கும்னு தெரியுமே; 'அது' இருக்குதா?'
'அது' இல்லாமலா... வகுப்பறை துவங்கி மதுபானக்கூடம் வரை வகைதொகையின்றி சூடேற்றுகிறார் கேத்தரின் தெரசா. 'இந்த காட்சி அதுல பார்த்தது; அது... இதுல பார்த்தது' என்று படம் முழுக்க நம் ஞாபகங்கள் மணியடித்துக் கொண்டே இருக்கின்றன; அவற்றின் தலை தட்டி அமர வைத்துவிட்டால் கேங்கர்ஸ் ருசிக்கும். முக்கியமாக 'லாஜிக்' பார்க்கவே கூடாது!
வெல்கம் பேக் சிங்காரம் என்ற வடிவேலு.
ஆக...
பழைய சோறுதான்... 'வடிவேலு' எனும் கெட்டித் தயிருடன்!