PUBLISHED ON : ஏப் 27, 2025

ஒரு கதை உணர்ச்சிவசப்பட வைத்தால் மட்டும் போதுமா?
தனது பழைய அம்பாசிடர் காரை வாடகை வண்டியாக பயன்படுத்தி வருமானம் ஈட்டும் சாதாரணன் ஷண்முகன் என்கிற பென்ஸ். துாய பால் போன்று இருக்கும் ஷண்முகனின் குடும்ப வாழ்வில் துளி விஷமாக கலக்கிறது ஒரு சம்பவம். பாதிக்கப் படும் குடும்பம், இதற்கு ஷண்முகனின் எதிர்வினை என நகர்கிறது மிச்சக்கதை!
'இந்த படத்திலாவது மோகன்லாலின் நடிப்புத் திறனை காட்டுவாங்களா' என்கிற ஆசையுடன் வந்தவர்களிடம், 'இதோ உங்களுக்காக' என்று லாலேட்டனை பல காட்சிகளில் பயன்படுத்தி இருக்கின்றனர்.
ஷண்முகன் என்கிற குடும்பத் தலைவனை, டாக்ஸி ஓட்டுனனை, முன்னாள் சினிமா ஸ்டன்ட் கலைஞனை மோகன்லால் பிரித்து காண்பித்த விதம் சிறப்பு!
த்ருஷ்யம் ஜார்ஜ் குட்டியை ஞாபகப்படுத்த நிறைய வாய்ப்புள்ள கதைக்களம்; ஆனால், ஷண்முகனின் காலடித்தடம் மாறாமல் நடந்திருக்கிறார் மோகன்லால். வரனெ ஆவஷிய முண்டு கதையில், 'சுரேஷ் கோபி - ஷோபனா' நிகழ்த்தியது போல இதில் 'மோகன்லால் - ஷோபனா' எந்த மாயாஜாலமும் நிகழ்த்தவில்லை!
'நல்லவர்' தொனியில் காவல் ஆய்வாளரின் அறிமுகமே அவர் விஷம் என்று சொல்லிவிடுகிறது. கோணிப்பையின் உள்ளே இருப்பது யார் என்பதையும், காவல் ஆய்வாளரின் செயலுக்கான காரணத்தையும் எளிதாக யூகிக்க முடிகிறது.
இயக்குனர் தருண் மூர்த்தி முடிச்சுகளை அவிழ்த்துவிட்டு 'டொட்டொடய்ங்...' என்று நமக்கு ஆச்சரியம் காட்டும்போதெல்லாம், ரசிகர்கள் ஆட்டோ பிடித்து அடுத்த காட்சிக்கே சென்று விடுகின்றனர். தந்தை பாசம், காதல் பாசம், குரு பாசம், நாய் பாசம் என வரிசையாக அவர் எய்திய பாச அஸ்திரங்களுள் சில மட்டும் இதயம் தைக்கின்றன.
ஆக...
'திக்... திக்...' என்றிருந்திருக்க வேண்டிய படைப்பு; 'புஸ்... புஸ்...' என்றபடி பரிதாபமாய் முழிக்கிறது!