PUBLISHED ON : மார் 09, 2025

'ஹிந்தி திணிப்பு'ன்னு நம்புறியா; அப்போ, இது பயங்கரமான பேய் படம்!
பொம்பளை பேய்களை அடியாட்களா வைச்சுக்கிட்டு பெருங்கடலை கட்டியாளுற ஒரு தாத்தா பேய்; அந்தகாலத்து தமிழ் படங்கள்ல எல்லாரையும் ரஜினிகாந்த் அடிச்சுப் போட்டதும், பனியன் போடாத உசரமான ஒரு முரட்டு மொட்டை வந்து ரஜினியை அடிச்சுட்டு அடிவாங்கும் இல்லையா... அந்தமாதிரி, இதுல ஒரு எலும்புக்கூடு பேய்!
இடைவேளைக்கு அப்புறம் ஆரம்பிச்சு 'க்ளைமாக்ஸ்' வரைக்கும், ஜி.வி.பிரகாஷ் அண்டு கோ இந்த பேய்களோட கடலுக்கு நடுவுல சண்டை போட்டுக்கிட்டே இருக்குற மாதிரி திரைக்கதை. ஜி.வி.,யோட பின்னணி இசை மட்டும் இல்லேன்னா... மயான மண்ணுக்குள்ளே படுத்திருந்தது எல்லாம் நடமாடுற மாதிரிதான் மொத்த படமும்!
கடல் ஒளிச்சு வைச்சிருக்கிற தங்கத்தை காவல் காக்குற தாத்தா பேயை ஒழிச்சு, தன் கிராமத்து மீனவர்கள் மீன் பிடிக்க உதவுறானாம் பேரன். 'டைட்டில் கார்டு' பின்னணியில 'வந்தே பாரத்' வேகத்துல ஜி.வி.,யோட இசை பறக்குறப்போ, ஏதோ விறுவிறுன்னு நடக்கப்போகுதுன்னு தோணுச்சு!
ஆனா, 'எல்லாமே நமக்குத்தான் நடக்கப்போகுது'ன்னு டைட்டில் முடிஞ்சதுமே புரிஞ்சிருது. 'படகை சுருட்ட ராட்சஸ அலை வர்றபோதும், கழுத்தை கவ்வ பேய் தவ்வி வர்றபோதும் பட்டுன்னு திரை இருண்டு போயிருது; மறுபடியும் திரையில படம் வர்றப்போ படகு ஜம்முன்னு போயிட்டு இருக்குது; பேய் கம்முன்னு படகுல கிடக்குது!
'ச' எழுத்தை 'ச்ச...'ன்னு அழுத்தினா அது துாத்துக்குடி பாைஷ'ன்னு படம் முழுக்க பேயைக் காட்டிலும் கொடூரமா கடிக்கிறானுங்க! ஆக்ஸிஜன் இல்லாம கடலோட தரை தொட்டு, அங்கே ஒரு வேலை பார்த்துட்டு உசுரோட மேல வர்றாப்ல ஜி.வி.பிரகாஷ்.
இதுக்கப்புறம், உங்க உசுரு... உங்க இஷ்டம்!
ஆக...
'டைட்டானிக் பட தரத்திற்கு இணையான வெற்றி படம்!' - தமிழ் சினிமா வெறியன்.