PUBLISHED ON : பிப் 02, 2025

'பொன்' தரத்திற்கு 24 காரட்; மனிதனுக்கு?
திருமணத்திற்கு தங்க நகைகளை கடனில் கொடுத்து, மொய் பணத்தில் கை வைக்கும் விஷம முதலாளிக்கு விசுவாச தொழிலாளி அஜேஷ்! 25 பவுன் தங்கம் கொடுத்தால்தான் ஸ்டெபியின் திருமணம் நடக்கும் என்கிற சூழலில் அஜேஷிடம் செல்கிறது ஸ்டெபியின் ஏழை குடும்பம். அவ்விடம் அஜேஷின் வசூல் விபரம் என்ன?
வரதட்சணைக்கு மறைமுக ஏற்பாடுகள் வந்துவிட்ட இக்காலத்திலும், அது வெளிப்படையாக நிகழ்கின்ற ஒரு கேரளத்து கிராமம்; இச்சூழலை வைத்து கல்லா கட்டும் ஒரு தொழில். நகைக்காக உழைத்தே கடனாளியாகும் தொழிலாளர் சமூக பின்னணியில், மூன்று திசைகளில் கடல் சூழ்ந்த நிலத்தில் விரிகிறது திரைக்கதை!
போதை பேர்வழியான ஸ்டெபியின் அண்ணன் புரூனோ, ஸ்டெபியின் முரட்டு கணவர் மரியானோ உட்பட திரையில் வரும் ஆண் கதாபாத்திரங்களின் பண்புகள் சரியான கலவையில் வடிக்கப்பட்டுள்ளன!
துவங்கிய புள்ளியில் முடியும் வட்டம் போன்ற பாத்திரங்கள் ஒரு ரகம்; துவங்கிய புள்ளிக்கு நேரெதிர் புள்ளியில் முடியும் நீள கோடு போன்ற பாத்திரங்கள் மற்றொரு ரகம். இக்கதையில் கோடாக பயணிக்கும் பாத்திரங்களே அதிகம். ஸ்டெபி முற்றுப்பெறும் விதத்திற்கு அழகூட்டுகிறது அப்பாத்திரம் ஏற்ற லிஜோ மோலின் வெட்கச் சிரிப்பு!
வயிற்றில் கத்திக்குத்து வாங்கியதும் பாசில் ஜோசப் நடித்திருக்கும் விதம் எளிது; அதை புதிதாக சித்தரித்திருக்கிறது ஜோதிஷ் ஷங்கரின் அறிமுக இயக்கம். கதையாகப் பார்த்தால் குளமாகவும், பாத்திரங்களாக பார்த்தால் கடலாகவும் தெரிகின்ற படைப்பு.
ஆக...
சில ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் புதிதாக ஒன்றை உணர்த்துவான் இந்த பொன்மேன்.