PUBLISHED ON : பிப் 02, 2025

வான் புகழ் பெற்ற அமரனின் கதை!
இது, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான 1965ம் ஆண்டு போரின் ஒரு சம்பவத்தையும், அஜ்ஜமடா பி.தேவய்யா எனும் வீரரையும் பற்றிய பதிவு. தேவய்யாவை 'கிருஷ்ண விஜயா' எனும் புனைப்பெயரில் படைத்திருக்கின்றனர்!
செப்டம்பர் 6, 1965ல் பாகிஸ்தான் விமானப்படை நமது ஆதம்பூர் விமான தளத்தை தாக்க, பதிலடியாக அவர்களின் சர்கோதா விமான தளத்தை இந்திய விமானப்படை தகர்க்கிறது. இந்த தாக்குதலுக்கான 12 பேர் குழுவில் கிருஷ்ண விஜயா இல்லை; ஆனால், அக்குழுவின் வெற்றிக்கு அவரே காரணமாகிறார்; எப்படி?
போரில் காணாமல் போன ஒரு வீரனுக்காக, 23 ஆண்டுகள் கைவிடாத தேடலை செய்த விங் கமாண்டர் அகுஜா பற்றிய தகவல்கள் சிலிர்க்க வைக்கின்றன.
முதல்பாதியில், ராணுவ பின்னணி கதைகளுக்கான ஆரம்பநிலை கற்பனைகளே காட்சிகளாக மாறி இருக்கின்றன. பாகிஸ்தான் எல்லைக்குள் காணாமல் போன இந்திய வீரனை தேடும் பரபரப்பான இரண்டாம் பாதியால் மீள்கிறது படைப்பு. 'அகுஜா' அக் ஷய் குமாரை காட்டிலும் கிருஷ்ண விஜயாவாக வரும் வீர் பஹாரியா, தனது அறிமுக படத்திலேயே இயல்பான நடிப்பை தந்திருக்கிறார்!
'தேசபக்தி எனும் பித்து பிடித்தவனே வீரன்' உள்ளிட்ட சில வசனங்களால் ராணுவ முகாமில் நிற்பது போன்ற உணர்வு! கிருஷ்ண விஜயாவுக்குரிய அங்கீகாரம் கிடைக்கும் வரை தனக்கான அங்கீகாரத்தை ஏற்காத அகுஜாவின் பண்பும், அந்த அங்கீகாரத்தை சரியான தருணத்தில் கிருஷ்ண விஜயாவின் மகள் வழங்கும் க்ளைமாக்ஸும் நம் கண்களை ஈரமாக்குகின்றன.
ஆக...
தமிழ் அமரன் மட்டுமல்ல... இந்த அமரனையும் கொண்டாட வேண்டியது நம் கடமை.