நாங்க என்ன சொல்றோம்னா...: ரேகாசித்ரம் (மலையாளம்)
நாங்க என்ன சொல்றோம்னா...: ரேகாசித்ரம் (மலையாளம்)
PUBLISHED ON : ஜன 12, 2025

'ஹலோ... மலக்கப்பாரா போலீஸ் ஸ்டேஷன்?'
இன்ஸ்பெக்டர் விவேக் ஏற்கும் இந்த தொலைபேசி அழைப்பு, அவனிடம் ஒருத்தியின் எலும்பு துண்டுகளும், கொலுசும் வந்துசேர காரணமாகிறது. அழைப்புக்கு வித்திட்டவன் உச்சரித்த பெயர்களை வடிகட்டுகையில், அது 'மம்மூட்டியின் காதோடு காதோரம் படத்தின் ஒரு காட்சியில அவ நடிச்சிருக்கா' என்று சொல்பவன் முன் விவேக்கை நிறுத்துகிறது. யார் அவள்?
அவள் குறித்த முதல் துப்பு தருபவனிடம் விவேக் வந்துசேரும் விதமே, 'இதனை இதனால் இவன் முடிக்கும்... குறளுக்கு உரியவன் இவன்' என உணர்த்தி விடுகிறது. காதோடு காதோரம் படப்பிடிப்பு நடந்த இடம், படத்தில் பணியாற்றியவர்கள், கன்னியாஸ்திரி உள்ளிட்ட விஷயங்களை கோர்க்கும் விதமோ, க்ரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் விவேக்கை நினைவூட்டுகிறது!
இக்கதையை 40 ஆண்டுகளுக்கு முன் வெளியான ஒரு திரைப்படத்துடன் தொடர்புபடுத்தியது; ஒரு கடிதத்தை ரகசியம் திறக்கும் சாவியாக்கியது; கடித உறைக்குள் காசோலை இருப்பதாக எண்ண வைத்தது; அச்சு ஊடக துணையுடன் துப்பு துலக்குவது என ஜோபின் டி. சாக்கோவின் இயக்கம் வெல்லும் இடங்கள் பல!
ஆசிப் அலிக்கு இது மற்றுமொரு காவல் அதிகாரி பாத்திரம். இதனுள் தானொரு சூதாட்டக்காரன், ரப்பர் மர விவசாயி, பணியில் இடைநீக்கம் செய்யப்பட்டவன் எனும் விஷயங்களை அடக்கியிருக்கும் நடிப்பு பிரமாதம். 'இதனை இதனால் 'இவள்'முடிக்கும்...' என்று திருவள்ளுவர் ஏன் எழுதவில்லை' என்று யோசிக்க வைக்கிறார் 'ரேகா' அனஸ்வர ராஜன்!
'இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்' ரசிகர்களுக்கான விருந்து இது.
ஆக....
'யார் அந்த சார்' என்பதை கண்டறிய இந்த விவேக் வர வேண்டும்!