நாங்க என்ன சொல்றோம்னா...: ரைபிள் கிளப் (மலையாளம்)
நாங்க என்ன சொல்றோம்னா...: ரைபிள் கிளப் (மலையாளம்)
PUBLISHED ON : டிச 22, 2024

பாரம்பரிய துப்பாக்கி - நவீன துப்பாக்கி சண்டை!
ஆயுத வியாபாரியின் மகன் பிறந்தநாள் நிகழ்வில் நடனமாடும் மங்கை மீது மகன் பாய, அவளின் காதலன் அதை தடுக்க, சண்டை மூர்க்கத்தில் வியாபாரி மகன் இறக்க, தந்தையின் ஆட்கள் காதலர்களை விரட்ட, இதற்குப் பின்...
துப்பாக்கி சுடுதலையும், விலங்கு வேட்டையையும் பாரம்பரியமாக செய்துவரும் ஒரு கூட்டுக் குடும்பம் இதில் சம்பந்தப்பட... புதிய பாதையில் பயணிக்கத் துவங்குகிறது கதை! ஊனமான தனது காலில் எதிரியின் தோட்டா துளைத்ததும், 'பாவம்... ஒரு தோட்டா வீணாப் போச்சு' என்று சொல்பவர் குடும்பத்தின் மூத்தவர். மற்றவர்களும் இவருக்கு சளைத்தவர்கள் அல்ல. காதை உரசிக் கொண்டு தோட்டாக்கள் பாயும் வேளையிலும் நாத்தனார் சண்டை, கணவன் - மனைவி சண்டை, அண்ணன் - தம்பி சண்டை நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன!
திரைக்கதை முழுக்க தோட்டா மழை பொழிந்தாலும், சீறும் தோட்டாக்களுக்கு ஒலி கலவையில் கடிவாளம் பூட்டி இருக்கின்றனர். இதனால், 'முரட்டு ஆக் ஷன் படம்' என்ற பெயர் எடுக்காமல், 'கலகலப்பான ஆக் ஷன் படம்' என்ற பெயர் கிடைத்திருக்கிறது!
மேல் சட்டையின்றி நவீன பட்டாபட்டி டவுசருடன் பழிவாங்க வருவது முதல், 'ஒன்டிக்கு ஒன்டி வர்றியா...' என்று சவால் விடுவது வரை ஒவ்வொரு காட்சியிலும் 'நான் இயக்குனர் நெல்சனின் பாத்திரமாக நடிக்க ஏற்ற ஆள்' என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார் அனுராக் காஷ்யப்.
'தப்பியோடும் காதலர்கள் தஞ்சம் புகுந்த இடத்தில் ஒரு குழு காப்பாற்றுகிறது' எனும் ஒரு வரி கதையில், துப்பாக்கிகளின் புராணம் வித்தியாசமாக இருப்பினும் உணர்ச்சிகரமாக இல்லை. 'என்னது... உணர்ச்சி துாண்டாத மலையாளப் படமா' என்று தலையை தொங்க விடுபவர்களுக்கு இது உகந்ததல்ல.
ஆக...: நம்ம முதல்வர் பேசுன மலையாளம் மாதிரி இருக்கு படம்; சும்மா... மயக்குதுங்க!