PUBLISHED ON : நவ 09, 2025

'எது அழகு' என பிடிபடாத வாழ்வில் அகத்தின் நோய் நீக்கும் திரை சிகிச்சை!
'வெண்புள்ளி' நோயால் பாதிக்கப்பட்ட ஜோதிஷ் நண்பர்களால் கேலி செய்யப் படுகையில், தன்னை அழகற்றவனாக உணர்கிறான்; இந்நிலையில் இருந்து மாறி அவன் எதிர்திசையில் பயணப்படும் கதை! 'சுத்திப்பாரு அத்தனையும் திசை... நடந்து பாரு எல்லாமே பாதை' என்று கதற கதற அறிவுரை ஊசி போடாமல், ஜோதிஷ் தன்னம்பிக்கையற்று இருப்பதற்கான குடும்ப நிலை, சமூகச் சூழலை கொண்டு அமைக்கப்பட்ட திரைக்கதை, இப்பிரச்னைக்குரிய வேரினை அடையாளம் காட்டி நம் உலகில் நம் புரிதல் மேம்பட உதவுகிறது!
வெண்புள்ளி பாதிப்பால் தன்னைத் தானே அங்கீகரித்துக் கொள்ள தவறியவர்கள் ஜோதிஷுடன் தங்களை பொருத்திப் பார்த்துக் கொள்ளும் வகையிலான காட்சிகளும், வசனங்களும் போனஸ்!
இரட்டை மாட்டு வண்டியில் பாதை மாறும் மாட்டினை சரிப்படுத்தும் ஜோடி மாடு போல, ஜோதிஷின் காதலி சந்தியா; 'குறையை மறைக்க கேமராவுல 'பில்டர்' மாத்தினா போதாது; உனக்குள்ள இருக்குற தாழ்வுணர்ச்சியை போக்கணும்' எனும் அவளின் கண்டிப்பும், குடிநீர் தொட்டி மீது ஜோதிஷுக்கு தரும் பாடமும் வணங்க வைக்கின்றன!
வெண்புள்ளி தரும் மன போராட்டத்தையும், கனவு களையும் வறுமையோடு சுமக்கும் இளைஞனாக அர்ஜுன் அசோகன்; தனது அகச்சிக்கல்களுடன் முட்டிமோதி அனுபவம் பயிலும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைக்கிறார்!
'வறுமையில பிறந்தவங்க வறுமையிலதான் சாகணுமா' என்று விரக்தியின் விளிம்பில் வாழும் ஏழை குடும்பத் தலைவிகளின் வடிவமாக தேவதர்ஷினி பாத்திரம்; தன் விரக்தியானது மகனை சிதைக்கிறது என்பதை அறிந்து மனம் மாறும் இடம்... பசுமரத்தாணி!
தாழ்வு மனப்பான்மையால் மனதளவில் குகை மனிதனாக வாழும் ஒருவன், இருண்ட மனக் குகைகளில் இருந்து நம்மை வெளியேறச் சொல்கிறான்.
ஆக...
'அன்புள்ள எனக்கு...' என்று உணர்வுப்பூர்வமாய் நம்மை கடிதம் எழுதத் துாண்டுகிறான் இந்த கதாநாயகன்!

