நாங்க என்ன சொல்றோம்னா: டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்
நாங்க என்ன சொல்றோம்னா: டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்
PUBLISHED ON : மே 18, 2025

வெல்டன் சந்தானம்!
படங்களை கழுவி ஊத்தியே பேமஸ் ஆனவன் 'யு டியூபர்' கிஸா. ஒரு மர்ம தியேட்டர்ல ஓடுற பேய் படத்துல கிஸாவோட குடும்பத்தையும், லவ்வரையும் வேற கதாபாத்திரமா மாத்தி வைச்சு, அந்த கதைக்குள்ளே கிஸாவை அனுப்புறான் இயக்குனர் ஹிட்ச்காக் இருதயராஜ்; அவன் ஒரு பேய். இந்த கதையில இருந்து தன் குடும்பத்தை கிஸா காப்பாத்துறது கதை!
அந்த கதையில கவுதம் வாசுதேவ் மேனன்தான் ஹீரோ; அவரை பங்கமா கலாய்ச்சிருக்காங்க; 'கலாய்க்குறாங்க'ன்னு தெரிஞ்சுக்கிட்டு அவரும் அதை தெரிஞ்சே மாதிரியே காட்டிக்கிறாரு! 'நிழல்கள்' ரவி குரலை வைச்சு காமெடி பண்ணலாம்னு ஐடியா பிடிச்சது யாரு சாமி... மனுஷன் தாறுமாறா ஜமாய்ச்சிட்டாரு!
'சத்தம் வந்தா பேய்க்கு தெரிஞ்சிடும்'னு தகர குண்டாவுல சிக்குன காலை மேல துாக்கிக்கிட்டு கையில நடக்குற ரெடின் கிங்ஸ்லி காமெடி; உடைஞ்சு போன 'டிவி'க்கு பின்னால இருந்து ராசிபலன் சொல்லி வில்லனை ஏமாத்துற 'லொள்ளு சபா' மாறன் காமெடி; சந்திர கிரகணம் முடிஞ்சிடாம பார்த்துக்குற மொட்டை ராஜேந்திரன் காமெடி; பயத்துல கத்துற சத்தத்தை காலியான வாட்டர் பாட்டில்ல அடைச்சு வேற பக்கம் துாக்கிப் போடுற காமெடி... இதெல்லாம் படத்துல மஜாவா இருக்குது!
படம் முழுக்க 'காத்து மேல... காத்து கீழே... காத்து சைடுல...' மனநிலையிலதான் சந்தானம் வர்றாரு; 'புள்ளிங்கோ...' பின்னணி உள்ள கதாபாத்திரத்துல நல்லா நடிச்சிருக்காரு! 'நல்லா பண்றதைவிட மொக்கையா எதுவும் பண்ணிடக்கூடாது'ங்கிற இயக்குனரோட உஷார் வேலையால இந்த கதை நல்லாவே 'ஒர்க் அவுட்' ஆகியிருக்கு.
ஆக...
காஞ்சனா, அரண்மனை சிதைத்த காமெடியின் மரியாதையை மீட்ட டி.டி.,க்கு நன்றி!