ADDED : ஜூலை 06, 2024 09:05 AM

மழைக்காலத்தில் பூனைகளை எப்படி பராமரிப்பது?- எஸ்.சேயோன், கோவை.
வெயிலில் இருந்து மழைக்காலம் தொடங்கும் போது, சுற்றுப்புற தட்பவெப்ப சூழலால், பூனைக்கு சில தொந்தரவுகள் வரலாம். குறிப்பாக, உடல் வெப்பநிலை குறைதல், சோர்வாக இருப்பது, 'லிட்டர் பாக்ஸ்' தவிர மற்ற இடங்களில் சிறுநீர், மலம் கழிப்பது, சளி பிடிப்பது, தும்முதல், காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படலாம்.
இச்சமயங்களில், வீட்டில் அதிக இடங்களில், லிட்டர் பாக்ஸ் வைப்பது, டவல், போர்வை கொண்டு போர்த்திவிடுதல், குளிரில்லாத இடங்களில் தங்க வைத்தல், சுத்தமான தண்ணீர் அதிகம் பருகுவதை உறுதி செய்தல், இளம்சூடான உணவு கொடுத்தல் வேண்டும். பொதுவாக, தடுப்பூசி போடப்பட்ட பூனைகளுக்கு, இத்தொற்றுக்கான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். இருப்பினும், கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்வது அவசியம்.
இக்காலக்கட்டத்தில், பிறந்து சில நாட்களே ஆன பூனைக்குட்டி, வயதான பூனைகள், சர்க்கரை, இருதய நோயால் பாதிக்கப்பட்ட பூனைகள் மீது, கூடுதல் அக்கறையுடன் பராமரிக்க வேண்டும். இவற்றிற்கு ஏதேனும் வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் இருந்தால், அலட்சியம் காட்டாமல், கால்நடை மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.- எஸ். சுப்பிரமணியன்,கால்நடை மருத்துவர், கோவை.