டாக்டர்'ஸ் கார்னர்: 48 மணி நேரத்தில் முதல் தடுப்பூசி
டாக்டர்'ஸ் கார்னர்: 48 மணி நேரத்தில் முதல் தடுப்பூசி
ADDED : ஆக 17, 2024 11:48 AM

மழைக்காலத்தில் கர்ப்பமாக இருக்கும் நாய்கள் மற்றும் பிரசவத்திற்கு பின் குட்டிகளின்
பராமரிப்பு பற்றி விளக்கவும்.
- எம்.லட்சுமி, கோவை.
மழைக்காலத்தில், கர்ப்பமாக இருக்கும் நாய்கள், பிறந்த குட்டிகளை கூடுதல் அக்கறையுடன் பராமரிப்பது அவசியம். இக்காலத்தில் தட்பவெப்ப நிலை மாற்றத்தால், தொற்று நோய் கிருமிகளின் தாக்கம் அதிகமிருக்கும். தோல் சார்ந்த தொந்தரவுகள் வரலாம். உண்ணி காய்ச்சல் ரத்தசோகையால் பாதிக்கப்படவும் வாய்ப்பு அதிகம்.
கர்ப்பம் உறுதியாகும் போது, எக்ஸ்ரே, ஸ்கேன் மூலமாக, வயிற்றில் உள்ள குட்டிகளின் எண்ணிக்கையை அறியலாம். இக்காலக்கட்டத்தில் அதிக உணவு எடுத்து கொள்ள முடியாது. இதனால், புரதசத்து, நுண்ணுாட்டச்சத்து மிகுந்த உணவுகளை, குறிப்பிட்ட நேர இடைவேளையில் பிரித்து கொடுக்க வேண்டும். தாய் நாய்க்கு முறையாக தடுப்பூசி செலுத்தியிருந்தால், குட்டிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மழைக்காலத்தில் பிறந்த நாய்குட்டிகளுக்கு சற்று சூடான, கதகதப்பான சூழலை அமைத்து தர வேண்டும். பிறந்து ஒரு மணி நேரத்திற்குள், தாய்பால் பருக வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பின், ஒரு நாளில், 4-6 முறை குறிப்பிட்ட நேர இடைவெளியில், தாய்ப்பால் குடிக்க வைப்பது அவசியம். ஒருவேளை பிரசவத்தின் போது, தாய் இறந்தால், கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி, 'கமர்ஷியல் மில்க் ரிபிளேசர்' உரிய அளவுகளில் கொடுக்க வேண்டும். தாயிடம் இருந்து குட்டிகளை பிரித்த, 48 மணி நேரத்திற்குள் முதல் தடுப்பூசி செலுத்துவது
அவசியம்.
- என். பிரதீப்,
அரசு கால்நடை உதவி மருத்துவர், கோவை.