ADDED : டிச 06, 2025 08:58 AM

நாய் இனங்களிலேயே அதீத மோப்பத்திறன் கொண்டது 'பிளட்ஹவுண்ட்' நாய்கள் தான். இது, 230-300 மில்லியன் வாசனை ஏற்பிகளை கொண்டுள்ளது. மனிதர்களின் வாசனை ஏற்பிகள், 5-6 மில்லியன் மட்டுமே. இதனால், அமெரிக்காவின் சில மாநில நீதிமன்றங்கள், பயிற்சி பெற்ற பிளட்ஹவுண்ட் பப்பிகள் அடையாளம் காட்டும் தடயங்களை ஏற்கின்றன. மனிதர்களை போலவே நாய்களுக்கும், வலது, இடது கை பழக்கம் என, இருப்பக்க பழக்கம் உள்ளன. பொதுவான அதன் செயல்களில் எந்த பக்கத்தில் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதன் மூலம் இதை அறியலாம். ஆனால் இருப்பக்க பழக்கம் அதாவது, வலது, இடது கால்களை சமமாக பயன்படுத்தினால், அவை தீவிர மன அழுத்தத்தில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இனி வலிக்காது
ப றவை, பூனை, நாய் என எந்த செல்லப்பிராணியாக இருந்தாலும், அதன் நகத்தை வெட்டுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏனெனில், செல்லப்பிராணிகளுக்கு நரம்புகளுடன் சேர்ந்தே நகம் வளருவதால், அதை வெட்டும் போது, தெரியாமல் நரம்பை வெட்டிவிட்டால் ரத்தம் கொட்டும்; அவையும் வலியால் துடிக்கும். இதற்கு தீர்வாக, தற்போது 'எல்.இ.டி., லைட்' இணைத்து, நரம்பு, நகத்தை வேறுபடுத்தி திரையில் காட்டும் வகையிலான நகவெட்டிகள், மார்கெட்டில் கிடைக்கின்றன. இதை வாங்கினால், நகம் வெட்ட இனி பயப்பட வேண்டியதில்லை.

