ADDED : ஜூன் 22, 2024 11:22 AM

புதிதாக வாங்கிய குதிரையை பராமரிப்பது எப்படி?
வி.விமலா, கோவை.
குதிரை மிகவும் சென்சிட்டிவ்வான விலங்கு. செல்லப்பிராணியாக வளர்க்கும் போது, பராமரிப்பு முறைகளில் கவனம் செலுத்த வேண்டும். குதிரை ஒரு நாளைக்கு சுமார் 20-30 லிட்டர் தண்ணீர் குடிக்கும். இதன் அளவு குறைந்தால், அழுகிய உணவுப்பொருட்கள் மற்றும் அதிக தீவனம் சாப்பிடுதல் போன்றவற்றால் வயிற்று வலி ஏற்படும். முன்னங்காலை துாக்கி அதன் வயிற்றில் உதைத்தல், குறைவாக சிறுநீர் கழித்தல், தீவனம் குறைவாக சாப்பிடுதல், தரையில் அடிக்கடி படுத்து புரளுதல் போன்ற அறிகுறிகளால், அவை வயிற்று வலியால் அவதிப்படுவதை அறியலாம்.
இச்சமயங்களில், முதலுதவியாக விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சிறிதளவு குடிக்க கொடுக்கலாம். கட்டாயம் கால்நடை மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். இதில் அலட்சியம் காட்டினால் அதீத வயிற்றுவலியால் குதிரை இறக்கவும் வாய்ப்புள்ளது. தினசரி குளிப்பாட்டுவது, குரூமிங் செய்வது, பாதத்தை சுத்தப்படுத்துவது அவசியம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை தடுப்பூசி போடுவதோடு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குடல்புழு நீக்கம் செய்ய வேண்டும். தினசரி சிறிது நேரமாவது, குதிரை நடத்தல், ஓடுதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுத்துவது அவசியம்.
- எம். சத்தியநாதன்,
கால்நடை மருத்துவர், கோவை.

