ADDED : மே 25, 2024 08:35 AM

சிவகங்கையைச் சேர்ந்த சிந்துஜா: எனது பெட் ரோஷி. ஒரு உறவாகவும், நண்பனாகவும் ரோஷி இருக்கிறது. எனக்கு தாய், தந்தை கிடையாது. இரண்டு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளி நான். பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளேன். வீல் சேர் பாஸ்கெட் பால் பிளேயர். ரோஷிக்கு 5 வயது ஆகிறது. ரோஷி தான் என் கஷ்ட நஷ்டங்களில், கூடவே பயணிக்கிறது.
எனக்கு கால்கள் இல்லாததால் வீட்டில் சில வேலைகளை ரோஷி தான் செய்யும். நான் என்ன சொல்கிறேனோ அதை அப்படியே பார்க்கும். ஒரு பொருளை எடுத்து வர சொன்னால் எடுத்து வரும். மீண்டும் கொண்டு போய் வைக்க சொன்னால் வைத்துவிடும். என் மீது மிகவும் பாசம். நான் என்ன சாப்பிடுகிறேனோ அதையே ரோஷி சாப்பிடும்.
ஒருவர் நம்மை அளவின்றி நேசிக்கிறார் என நினைத்தாலே, மனசு லேசாகி விடும். எந்த ஒரு கள்ள கபடமில்லாமல் அன்பை மட்டுமே அள்ளித்தரக் கூடிய செல்லப்பிராணியான ரோஷியுடன் நேரத்தை செலவிடுவது மன அழுத்தத்தை குறைத்து மன அமைதியையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்க செய்கிறது. அது காட்டும் அளவில்லாத அன்பால், என் சூழலும் அழகாகிறது, என்றார்.

