ADDED : ஜூன் 22, 2024 01:26 AM

''நம்ம நாட்டுல, காட்டு விலங்குகளை செல்லப்பிராணியா வளர்க்க, தடை இருக்கு. வெளிநாடுகள்ல இருந்து, ஏற்கனவே இறக்குமதி செய்து, இங்க ப்ரீட் பண்ற பெட்ஸ, மத்திய காடுகள், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் இணையதளத்துல (www.parivesh.nic.in) அனுமதி சான்றிதழ் பெற்று வளர்க்கலாம்,'' என்கிறார், கோவை, ஆர்.எஸ்.புரம், 'வூப் எக்ஸாடிக் டேம்டு பெட் ஷாப்' உரிமையாளர் ராகுல்மனோகர்.
அவருடன் ஓர் சந்திப்பு...
உங்ககிட்ட இருக்கற வெரைட்டி பத்தி...
பைத்தான், இக்வானா, சுகர்கிளேடர், மைக்ரோ ஸ்குரில், ஹாம்ஸ்டர், டாரன்டுலா, பேர்ட்ஸ், கேட்ஸ், டாக்ஸ், இதோட புட்ஸ் இருக்கு. நான் ப்ரீடிங் பண்றதில்லை. இதனால, கஸ்டமர்ஸ் கேக்குற புது எக்ஸாடிக் வெரைட்டிய, ப்ரீடர்கிட்ட இருந்து வாங்கி கொடுக்குறோம். இதை எப்படி வளர்க்கணும்னு ஓனருக்கு வழிகாட்டுறோம்.
பாஸ்ட் மூவிங்ல இருக்கற எக்ஸாடிக் என்னென்ன?
இக்வானா
ப்ளூ, ரெட், கிரீன்னு யுனிக்கான கலர்ல இருக்கறதால, குட்டீஸ் விரும்பி வளக்குறாங்க. இது ப்யூர் வெஜிடேரியன். ஆப்பிள், மஞ்சள் பூசணி, பாலக்கீரை கொடுத்தா, விரும்பி சாப்பிடும். பொறந்து 4 மாசத்துக்கு அப்புறம் முறையா பழக்கி, கஸ்டமருக்கு கொடுக்கறதால, ஈஸியா அட்டாச் ஆகிடும். கொஞ்சம் நாள் மட்டும், கூண்டுக்குள்ள வச்சிட்டு, அப்புறம் வீட்டுக்குள்ள ஓபன் ஸ்பேஸ்லயே வளர்க்கலாம். அதிகபட்சமா, 25 வருஷம் வரைக்கும் வாழுறதோட, 6 அடி வரைக்கும் வளரும்.
நானும் இக்வானா வளக்குறேன். இதோட பேரு ராசுக்குட்டி. இப்போ, மூன்றரை வயசு ஆகுது. ப்ரீ டைம்ல இதோட இருந்தா, மேல ஏறி விளையாடி குஷியாகிடும்.
பைத்தான்
ஸ்னேக் வெரைட்டில, பைத்தான் தான் அதிகம் வளக்குறாங்க. இதுல, பால், கார்பெட், புர்மீஸ், ராயல் பைத்தான்-னு சில வெரைட்டி இருக்குது. ஏழு மாசத்துக்கு அப்புறமா தான், கஸ்டமருக்கு கொடுப்போம். அதுவரை, கையில எடுத்து பழக்கப்படுத்துறதால, பல் இருந்தாலும் கடிக்காது. விஷத்தன்மை இல்லாதது. இதோட கண்ணாடி கூண்டுல, வெட், ட்ரை, ஹிடன் பிளேஸ் இருக்கற மாதிரி செட் அப் பண்ணிட்டா போதும். வெப்பநிலைக்கு ஏத்தமாதிரி அதுவே தகவமைச்சிக்கும். டெய்லி, மார்னிங், ஈவினிங்ல கொஞ்ச நேரம், இதோட டைம் ஸ்பென்ட் பண்ணணும். மத்தபடி பெருசா எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒரு குட்டி பைத்தான் விலை 15,000 ரூபாய்.
டாரன்டுலா
இது ஒரு எட்டுக்கால் பூச்சி வெரைட்டி; மெக்சிகன் நாட்டு ப்ரீட். இதையும் கூண்டுக்குள்ள வச்சி வளர்க்கலாம். பாம்பு மாதிரி இதோட கூண்டுலயும், வெட், ட்ரை, ஹிடன் பிளேஸ் செட் அப் இருந்தா, துறுதுறுன்னு விளையாடிட்டு இருக்கும். வாரத்துக்கு ஒருமுறை சாப்பாடு கொடுத்தா போதும். இதுக்குன்னு பிரத்யேகமான கமர்ஷியல் புட் கடைகள்ல கிடைக்குது. சாப்பிடும் போது மட்டும் தான் தண்ணீர் குடிக்கும். இதையும் கையில எடுத்து பழக்கப்படுத்திட்டு, கஸ்டமருக்கு கொடுக்கறதால, நோ பாய்சன். டாரன்டுலாவை குட்டீஸ் ஆர்வமா கேட்டு வாங்குறாங்க. இதோட விலை 4,000 ரூபாய்.
''போதும் போதும்...!
லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது''னு, வடிவேல் டயலாக்கோட விடை பெற்றோம்.
'டாக் ஷோ'வில் நானே கில்லி விருதுகளை அள்ளுகிறார் சொல்லி
கோவையைச் சேர்ந்த, 10 வயதான அக் ஷித்தா ராஜை சந்தித்தோம். கிரேடன், முதொல்ஹவுன்ட், பாக்ஸர்னு, நிறைய டாக்ஸோட, ஹாப்பியா வீட்டில் விளையாடிட்டு இருந்தார். அவருடன் பேட்டி:
இந்த வயசுலயே ஷோ ஹாண்டுலர்... எப்படி?
சின்ன வயசுல இருந்தே, அடம்புடிச்சி அப்பாவோட டாக் ஷோ போவேன். அங்க ஸ்டைல்லா டாக் வாக் பண்றது, ஒபீடியன்ட்டா நடந்துக்கறதை பார்த்து, நானும் ஹேண்டுலர் ஆகணும்னு ஆசைப்பட்டேன். இதுக்காக, டெய்லி டிரைனிங் எடுத்துக்கிட்டேன். என்னோட பர்ஸ்ட் ஷோல, வேற லெவல் எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சுது.
அப்போ நான் 4ம் வகுப்பு படிச்சிட்டிருந்தேன். மதுரையில நடந்த டாக் ஈவன்ட் தான் என்னோட பர்ஸ்ட் ஷோ. இதுக்காக நிறைய பிராக்டிஸ் பண்ணேன். ஆனா ஷோ நடந்தப்போ, காய்ச்சல் வந்துடுச்சு. நிக்க கூட தெம்பு இல்லாம தான் ஷோ நடக்கற இடத்துக்குள்ள போனேன். என்னோட பேரை மைக்ல கூப்பிட்டதும், முதொல்ஹவுன்ட் ப்ரீட்டோட ரிங்குல என்ட்ரீ ஆகிட்டேன். ஜட்ஜ் எனக்கு கைக்கொடுத்து பாராட்டுனாங்க. பெஸ்ட் ஷோ அவார்ட் கிடைச்ச அந்த நிமிஷத்தை மறக்கவே முடியாது. மெடல் வாங்குனதும், ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிட்டேன்.
அந்த அவார்ட் கொடுத்த எனர்ஜில, இந்த ஒன்றரை வருஷத்துல, 30 ஷோ என்ட்ரீ ஆகிட்டேன். 15 பெஸ்ட் ஜூனியர் அவார்ட் வாங்கியிருக்கேன். இன்னும் 5 அவார்ட் வாங்கிட்டா போதும், இந்தியா பெஸ்ட் ஜூனியர் ஹேண்டுலர்ங்கற டைட்டிலுக்கு சொந்தக்காரி ஆகிடுவேன்,'' என்றார்.
ஷோ ஹேண்டிலிங்ல உங்க ஸ்டைல்?
ஷோ ரிங்குல, டாக் நிக்கறது, நடக்குறது எல்லாமே, லீஸ் ஹேண்டிலிங்ல தான் இருக்கு. லெக் ஷேப், ஸ்டாண்டிங் ஸ்டைல், டெய்ல் லென்த், அனாடமி செக் பண்ணுவாங்க. பல்வரிசை காட்டணும். ரிங் உள்ள போய்ட்டா, டாக் யாரையும் கடிக்க கூடாது. இதுக்கு ஒரு சீக்ரெட் டெக்னிக் இருக்கு என, கண்களை சிமிட்டினார் அக் ஷித்தா.
அதென்ன சீக்ரெட் என்றதும், '' எந்த ப்ரீடா இருந்தாலும், அதோட கீ பாய்ன்ட்ல தடவி கொடுத்தா, ஓனர் சொல்றதை கேட்டு, சமத்துக்குட்டியா நடந்துக்கும். என்னோட முதொல்ஹவுன்ட்டோட கீ பாய்ன்ட் கழுத்துல இருக்கு. அந்த இடத்தை நீவி கொடுப்பேன். ஷோ முடியற வரைக்கும் நகராம அப்படியே நிக்கும். இதை தெரிஞ்சிக்கிட்டா ஷோ ரிங்கு உள்ள இறங்கி, கில்லி மாதிரி ஆடலாம், என்றார்.
வீட்டையே சுத்தி சுத்தி வரும்
உங்க பேர்ட்ஸ் ஜாலியா, சுதந்திரமா சிறகடிச்சு, வீட்டுக்குள்ளேயே சுத்தி சுத்தி வரணுமா. அவங்களுக்காக, வீட்டுல இருக்கற பழைய பிளாஸ்டிக் பொருட்களை வச்சி, மரம் மாதிரி செட்-அப் உருவாக்கலாம் வாங்க.
பழைய பி.வி.சி., பைப், கலர் த்ரெட்ஸ், ஆங்கர் கம்பி, சின்ன சின்ன டாய்ஸ் இருந்தா போதும். மரத்தோட பேஸ்மேன்ட்டுக்காக அடியில, சதுரமா பைப் செட் பண்ணிடனும். இதுல, கிளைகள் இருக்கற மாதிரி, பெண்டு பைப்ஸ், ஜாயின்ட் பண்ணிட்டா, படத்துல இருக்கற மாதிரியான மரத்தை உருவாக்கலாம்.
பெரிய கிளைக்கு நடுவுல ஹோல்ஸ் போட்டு, இரும்பு ஆங்கர் செட் பண்ணிட்டா, குட்டியான டாய்ஸ் தொங்க விடலாம். ரெடிமேட் பிளாஸ்டிக் ஆங்கர்சும் கடைகள்ல கிடைக்குது. இதை கலர்புல்லாக்குறதுக்கு, ரோப்ஸ் சுத்தி, டெக்ரேட் பண்ணலாம். பேர்ட்ஸ் ஏறி விளையாட, குட்டி ஏணி வைக்கலாம். பிளாஸ்டிக்பைப்போட வெயிட், சைஸ் பொறுத்து, சின்ன பேர்ட்ஸ்ல இருந்து, எக்ஸாடிக் வெரைட்டி வரைக்கும், உட்கார்ந்து விளையாடும். இந்த மாதிரியான டாய்ஸ் வீட்டுல இருந்தா, நீங்க இல்லாத நேரத்துலயும், பேர்ட்ஸ் ரிலாக்ஸா விளையாடி, என்ஜாய் பண்ணும்.
அப்புறம் என்ன பாஸூ, உங்க மொத்த கலைத்திறனையும் காட்டிட வேண்டியதுதானே!
அன்பை அள்ளித்தரும் 'நியோ' நெகிழும் அமெரிக்க வாழ் தமிழ் குடும்பம்
'செல்லமே தீவிர வாசகர்கள்' என்ற வாசகத்தோடு, இ-மெயிலில் தொடர்பு கொண்டவர்கள், அமெரிக்காவின், அட்லாண்டா பகுதியில் வசிக்கும் தமிழர்களான, கவுத்தம் விஷ்வநாதன், மலர் ராமசாமி தம்பதிகள். எங்களின் செல்லக்குட்டி நியோவை பற்றி எழுதுங்களேன் என்ற கோரிக்கையுடன், நம்மோடு பகிர்ந்தவை.
எங்களின் பூர்விகம் சென்னை, மந்தவெளி. நாங்கள் இருவரும் மருத்துவர்கள் என்பதால், வேலை நிமித்தமாக, கடந்த 2000ல் அமெரிக்காவில் குடியேறிவிட்டோம். எங்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். மூத்தவன் நித்தில் தற்போது பிளஸ்2வும், இளையவன் நேகன், ஒன்பதாம் வகுப்பும் படிக்கின்றனர். நாங்கள் இருவரும் வேலையில் பிசியாக இருப்பதால், மகன்களின் தனிமையை போக்க, பப்பி வாங்க வேண்டுமென முடிவெடுத்தோம். மகன்கள் இருவரும் டாக் லவ்வர்ஸ்.
இவர்களுக்காக, ஆஸ்திரேலியன் லேப்ரடூடுல் ப்ரீட் (நியோ) வாங்கினோம். எட்டு வார பப்பியாக, வீட்டிற்கு வந்த நியோவுக்கு தற்போது, 18 மாதங்களாகின்றன. டென்னிஸ் விளையாடும் போது பந்து எடுத்து வந்து தருவது, அவுட்டிங் செல்லும் போது முந்திக்கொண்டு காரின் முன்னிறுக்கையில் அமருவது, வேலை முடித்து வீட்டிற்குள் நுழையும் போது, பாசத்தால் கட்டியணைப்பது, மகன்களுக்குள் சண்டை வந்தால் தடுப்பது என, இவனின் சேட்டைகளை பட்டியலிட்டு கொண்டே இருக்கலாம். எங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே மாறிவிட்டாலும், நேகன் மீது, நியோவுக்கு பொசசிவ் அதிகம். கடல்தாண்டி வேறு நாட்டில் வசித்தாலும், நியோ வீட்டிற்கு வந்தபிறகு, மனநிம்மதியோடு, பாதுகாப்பாக இருப்பதாகவும் உணர்கிறோம்.
கோவையில் நாளை டாக் ஷோ!
கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப் சார்புல, நாளைக்கு, கோவை, நவ இண்டியா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில, சேம்பியன்ஷிப் டாக் ஷோ நடத்துறாங்க.
இதுல, 11 டைட்டில்ஸ்ல போட்டி நடத்துறதால, சர்டிபைடு டாக்ஸ் மட்டும் தான் கலந்துக்க முடியும். உங்க பப்பியோட தனித்திறமையை மதிப்பிடுறதுக்கு, சென்னையில இருந்து சுதர்சன், பெங்களூருவை சேர்ந்த யசோதரா ஜட்ஜா வர்றாங்க. நல்லா ட்ரைன் ஆன டாக்ஸ் ஷோக்கு வர்றதால, பெட் லவ்வர்ஸ் பார்வையாளரா கலந்துக்கலாம். பெட்ஸ்கான ஸ்டால்ஸ் இருக்கறதால, உங்க செல்லக்குட்டிக்கு தேவையான எல்லாத்தையும் வாங்கிட்டு போகலாம். போட்டி பத்தி கூடுதலா தெரிஞ்சிக்கறதுக்கு, 98430 79767/ 95852 66566 எண்களுக்கு டயல் செய்யலாம்.
யம்மி... டேஸ்டி...!
உங்க பப்பிக்கு,டேஸ்ட்டான சிக்கன் நக்கெட்ஸ் ரெசிபி இதோ:
வேகவைத்த சிக்கன் துண்டுகள் 200 கிராம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு 50 கிராம், ஒரு முட்டை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். இக்கலவையில் சிறிது கோதுமை மாவு சேர்த்து பிசைந்து,கொள்ளவும். இதை சிறு உருண்டைகளாக பிடித்து, உள்ளங்கையில் வைத்து அழுத்தி, நக்கெட்ஸ் வடிவில் வைக்கவும். ஓவனில், 400 டிகிரியில், 15-20 நிமிடங்கள் வரை வைத்தால், டேஸ்ட்டான நக்கெட்ஸ் ரெடி.
வயிற்று வலி? இத, படிங்க
குதிரை மிகவும் சென்சிட்டிவ்வான விலங்கு. செல்லப்பிராணியாக வளர்க்கும் போது, பராமரிப்பு முறைகளில் கவனம் செலுத்த வேண்டும். குதிரை ஒரு நாளைக்கு சுமார் 20-30 லிட்டர் தண்ணீர் குடிக்கும். இதன் அளவு குறைந்தால், அழுகிய உணவுப்பொருட்கள் மற்றும் அதிக தீவனம் சாப்பிடுதல் போன்றவற்றால் வயிற்று வலி ஏற்படும். முன்னங்காலை துாக்கி அதன் வயிற்றில் உதைத்தல், குறைவாக சிறுநீர் கழித்தல், தீவனம் குறைவாக சாப்பிடுதல், தரையில் அடிக்கடி படுத்து புரளுதல் போன்ற அறிகுறிகளால், அவை வயிற்று வலியால் அவதிப்படுவதை அறியலாம்.
இச்சமயங்களில், முதலுதவியாக விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சிறிதளவு குடிக்க கொடுக்கலாம். கட்டாயம் கால்நடை மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். இதில் அலட்சியம் காட்டினால் அதீத வயிற்றுவலியால் குதிரை இறக்கவும் வாய்ப்புள்ளது. தினசரி குளிப்பாட்டுவது, குரூமிங் செய்வது, பாதத்தை சுத்தப்படுத்துவது அவசியம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை தடுப்பூசி போடுவதோடு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குடல்புழு நீக்கம் செய்ய வேண்டும். தினசரி சிறிது நேரமாவது, குதிரை நடத்தல், ஓடுதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுத்துவது அவசியம்.
- எம். சத்தியநாதன்,
கால்நடை மருத்துவர், கோவை.

