தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ 65 வயது பாட்டி காண வந்தார் 'உயிருள்ள வரை உஷா'

 65 வயது பாட்டி காண வந்தார் 'உயிருள்ள வரை உஷா'

 65 வயது பாட்டி காண வந்தார் 'உயிருள்ள வரை உஷா'


ADDED : பிப் 15, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 06:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேற்று காதலர் தினம்! இன்றைய 60 பிளஸ் மனிதர்களின் காதல் நினைவுகளை 'பிளாஷ் பேக்'கில் கொண்டு வர, இயக்குனர் டி. ராஜேந்தரின், 'உயிருள்ள வரை உஷா' திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி ஜம்மென்று ஓடிக் கொண்டிருக்கிறது.

கோவை அர்ச்சனா தியேட்டரில் அப்படத்தை பார்க்க, 65 வயதான ஒரு மூதாட்டி, நேற்று காலை 8 மணிக்கு வந்திருந்தார். தியேட்டர் ஊழியர்களுக்கு ஆச்சரியம். காலை காட்சி 11 மணிக்கே திரையிடுவோம் என கூறிய போதிலும், திரும்பிச் செல்லாமல், தியேட்டர் வளாகத்திலேயே ஓரமாக உட்கார்ந்து விட்டார்.

கவுன்டர் திறக்கப்பட்டதும் முதல் நபராக சென்று, 150 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு, அரங்கிற்குள் சென்றார். இரண்டரை மணி நேரம் படத்தை ரசித்து பார்த்து விட்டு, சந்தோஷமாக வெளியே வந்தார் பாட்டி.

''எங்கிருந்து வருகிறீர்கள்... இந்த வயதில் அதுவும் ஒரு காதல் படம் பார்க்க இவ்வளவு மெனக்கெட்டு வந்திருக்கிறீர்களே...''

''என்னுடைய பெயர் தனம், 65 வயதாகிறது. சுகுணாபுரம் பிள்ளையார்புரத்தில் வசிக்கிறேன். கணவர் இறந்து விட்டார். இரண்டு மகள்கள். இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. நான் எனது சகோதரி வீட்டுக்கு அருகே வசிக்கிறேன். கோட்டைமேட்டில் ஒரு ஹோட்டலில் பாத்திரம் கழுவும் வேலை செய்கிறேன். ஒரு நாளைக்கு சம்பளம் 200 ரூபாய்...''

''42 ஆண்டுக்கு பின் ரிலீசான படம் இது. இதற்கு முன், இந்த படத்தை பார்த்திருக்கிறீர்களா...''

''எனக்கு இவரை (டி.ஆர். படத்தை காட்டுகிறார்) ரொம்ப பிடிக்கும். சின்ன வயதில் படம் பார்த்திருக்கிறேன். அப்போது, என் வயது 30க்குள் இருக்கும். டவுனுக்குள் இருந்த 'ராஜா' தியேட்டரில் படம் பார்த்தேன். டிக்கெட் கட்டணம் 50 காசு.

இப்போது வேலைபார்க்கும் பகுதியில், இந்த பட போஸ்டர் ஒட்டியிருந்தது. எந்த தியேட்டரில் ஓடுகிறது என கேட்டு பஸ் ஏறி வந்து விட்டேன். இனி வேலைக்குச் செல்ல வேண்டும்,'' என்றார் சிரித்துக் கொண்டே!

நம்மிடம் பேச பேச, பாட்டிக்கு வெட்கம் தாங்க முடியவில்லை; பொக்கை வாய் சிரிப்புடன் பழைய நினைவுகளை பகிர்ந்தார். திரைப்படங்களில் தோன்றும் நாயகனை நேசிப்பதும் ஒரு வித காதல் தானே!

ஆம், பாட்டியின் மானசீக காதலுக்கு வயது 42!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us