ADDED : மார் 07, 2025 08:50 PM

''செல்லப்பிராணிகளுக்கான கலைப்பொருட்களில், உரிமையாளர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும், பல கதைகள் ஒளிந்திருக்கும்,'' என்கிறார், கோவையை சேர்ந்த ஜீவா.
கோவையில் உள்ள, கிப்ட் பீ (Gift Beee)நிறுவனத்தின் உரிமையாளரான ஜீவா, பி.இ., மெக்கானிக்கல் படித்து, கலை ஆர்வத்தில், 3 டி பிரிண்டிங் துறைக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். 10 ஆண்டுகளாக, இத்துறையில் அனுபவம் கொண்டவர்.
செல்லப்பிராணிகளுக்கான பல்வேறு வகை கலைப்பொருட்களை தயாரிக்கிறார். தற்போது டிரெண்டாக இருக்கும், பெட் கிப்ட் அயிட்டங்கள் பற்றி, இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
செல்லப்பிராணி பெயர் பொறித்த கீ செயின், டாலர் மட்டுமே முன்பு விற்கப்பட்டது. இப்போது, செல்லப்பிராணியின் உருவம் மற்றும் பெயர் கொண்ட கிப்ட் அயிட்டங்களை, அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாக, கீ-செயின், பப்பிக்கு கழுத்தில் தொங்கவிடப்படும் டாலர், பெட் ஷோ செல்வோர் அணியும் வகையிலான பேட்ஜ், செல்லப்பிராணிகளின் போட்டோ பிரேம் கொண்ட கிப்ட் அயிட்டங்கள், முகம் பொறித்த செல்லப்பிராணிகளுக்கான பவுல், டிராபி, கேஜ் என, பல்வேறு வித்தியாசமான பொருட்களை தயாரித்து தருமாறு, உரிமையாளர்கள் அணுகுகின்றனர்.
குடும்பத்திலுள்ள அனைவரும், செல்லப்பிராணியின் புகைப்படம், பெயர் பொறித்த டீ-சர்ட் அணிய விரும்புகின்றனர்.
இதை, 3 டி பிரிண்டிங், சப்ளிமேஷன் எனும், புகைப்படத்தை துணி, மரம், அலுமினியம், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களில் பிரிண்ட் செய்தல், அக்ரலிக் மற்றும் மரம், ஸ்டீல் உள்ளிட்ட பொருட்களில், மியாவ், பப்பியின் பாதம், முக அமைப்பு பொறிக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம்.
ஒவ்வொரு கலைப்பொருட்களிலும், ஏதேனும் தனித்துவத்தை புகுத்தும் வகையில், பப்பியின் தனித்துவம், உரிமையாளருடன் நடந்த மறக்க முடியாத சம்பவம், இடம் என ஏதாவது ஒன்றை அடையாளப்படுத்தும் வகையில் செய்து தருகிறோம். ஒவ்வொரு கலைப்பொருளின் பின்னணியிலும், உரிமையாளரின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கதைகள் ஒளிந்திருக்கும்.
வெளிநாடுகளை போல நம்மூரிலும், செல்லப்பிராணிகளுக்கான பேஷன் பொருட்களை மக்கள் தேடி தேடி வாங்குகின்றனர். டிசைனிங் தெரிந்தவர்கள், கலை மீதான ஆர்வம் கொண்டவர்கள் இத்துறைகள் வந்தால், தனித்துவம் பெறலாம்.