ADDED : ஆக 03, 2024 11:40 AM

''காற்றை கிழித்து கொண்டு, முன்னங்காலை துாக்கியபடி, சீறிப்பாயும் குதிரை, பிரமாண்டத்தின் உச்சம். தரையில் கால் படாத அளவிற்கு, கட்டுக்கடங்காத வேகத்தில் ஓடும், ஒரு குதிரை, உரிமையாளரின் குரலுக்கு கட்டுப்பட்டு நிற்பது தான் ஆச்சர்யமாக இருக்கிறது,'' என்கிறார் கோவையை சேர்ந்த, 'மகிழ்மதி இண்டிஜீனியஸ் பார்ம்' உரிமையாளர் தினேஷ்குமார்.
குதிரைப்பந்தயத்தில் வெற்றி பெற்ற கோப்பைகளை பெருமிதமாக காட்டிய பிறகு அவர் நம்மிடம் பகிர்ந்தவை:
சின்ன வயதில் இருந்தே, குதிரை வாங்கி வளர்க்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாட்டுக்குதிரை வாங்கினேன். இதற்கு தீவனம் மட்டும் கொடுத்து, முறையாக பழக்காததால், குதிரைக்கே உரித்தான வேகமும், திறனும் அதனிடம் இல்லாதது, பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.
நல்ல வனப்பான குதிரை வாங்கி, முறையாக பயிற்சி கொடுத்து, பந்தயத்தில் போட்டியிட வேண்டுமென்ற உந்துதலால், ராஜஸ்தான் சென்று ஒரு 'மார்வாரி' (சுஜி) இன குதிரை வாங்கினேன்.
பந்தயத்திற்கு தயார்ப்படுத்த வேண்டுமென்ற ஆவலில், இதன் வயிற்றில் குட்டி இருந்ததே தெரியாமல், தொடர் பயிற்சிகள் வழங்கினோம். திடீரென ஒருநாள் அதிகாலையில், இரு குட்டிகள் ஈன்றதும், பரபரப்பாகிவிட்டோம்.
சுஜி அதன் மகன்கள் லக்ஷ்மன், மகேந்திரனிடம் இருந்து தான், குதிரையை எப்படி வளர்ப்பது, உணவளிப்பது, குட்டிகளை பாதுகாப்பது போன்ற, பல்வேறு விஷயங்களை கற்று கொண்டேன். அடுத்தடுத்து குதிரைகள் வாங்க ஆரம்பித்தேன். இப்போது 7 மார்வாரி, சிந்தி இன குதிரைகள் இருக்கின்றன. அனைத்தையும் பந்தயத்திற்கு தயார்ப்படுத்துகிறோம். எங்கே போட்டி நடந்தாலும், என் குதிரைகள் போட்டியிட்டு வெற்றி பெறும். சீறிக்கொண்டு நிற்கும் குதிரைகள், என் குரல் கேட்டதும், குழந்தை போல மென்மையாக நடந்து கொள்வதோடு, முகத்தோடு முகம் வைத்து கொஞ்சுவது, சிணுங்குவது என, உணர்வு ரீதியான பிணைப்பை ஏற்படுத்திவிட்டன.
பந்தயத்திற்கான தயாரிப்பு முறைகள் என்ன?
முன்பு குதிரைகள் காட்டில் தான் வாழ்ந்தன. பின்னாளில், அதன் வேகம், திறனை பயன்படுத்தி கொள்ள, போருக்கு தயார்ப்படுத்தினோம். அதே திறனை தக்க வைக்க தற்போது, போட்டிகள் நடத்தப்படுகின்றன. நல்ல வனப்பான மேனி இருக்க வேண்டுமெனில், ஒவ்வொரு குதிரைக்கும், குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது செலவிட்டு, குரூமிங் செய்ய வேண்டும்.
உடல் திறனை அதிகரிக்க, பிரத்யேக உணவுகள், பயிற்சிகள் வழங்க வேண்டும். குறிப்பாக, பேரீச்சம்பழம், பால், பெல்லட் என்ற சிறுதானியங்கள் கலந்த உணவு, பசும்புல், கோதுமை, கொள்ளு என, குறிப்பிட்ட நேர இடைவேளையில் கொடுப்பது, தினசரி 'ஒர்க்-அவுட்' செய்ய வைப்பது அவசியம்.
உங்கள் எதிர்கால திட்டம் பற்றி
அரேபிய குதிரைகளுக்கு இணையாக போட்டியிடும் அளவிற்கு இந்திய இன குதிரைகள் வலிமையானது. போர் குணம் கொண்ட இக்குதிரைகளை, அதே வலிமையோடு பராமரிக்க, பல்வேறு அமைப்புகள் முனைப்பு காட்டி வருகின்றன. இம்முயற்சியில் சிறுதுளியாக நானும் இணைந்து, நிறைய இந்திய இன குதிரைகள் வளர்த்து, வெளிநாடுகளில் நடக்கும், குதிரைப்பந்தயப் போட்டிகளில் பங்கேற்க செய்ய வேண்டும். இதற்கான ஆயத்தப்பணிகளை துவங்கியிருக்கிறேன்.