ADDED : நவ 08, 2025 01:11 AM

''ம லேசியாவில் சராசரியாக 50 சதவீத குடும்பங்களில் செல்லப்பிராணிகள் உள்ளன. நாய், பூனையை வணிக ரீதியாக இனப்பெருக்கம் செய்வதற்கு, உரிமம் பெறுவது கட்டாயம்,'' என்கிறார், 'மலேசியன் கென்னல் கிளப்' உறுப்பினரும், ப்ரீடருமான சர்விந்தர் ரெட்டி பரசுராமு.
மலேசியாவில், பேராக் மாநிலத்தில், தைப்பிங் பகுதியை சேர்ந்தவர் சர்விந்தர் ரெட்டி பரசுராமு. கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்த இவர், மலேசியன் கென்னல் கிளப் உறுப்பினர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ப்ரீடர். மலேசியாவில் செல்லப்பிராணி வளர்ப்பில் பின்பற்றப்படும் நெறிமுறைகள் குறித்து, இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
மலேசியாவில், விலங்கு நல சட்டம் 2015 ன் கீழ், செல்லப்பிராணிகளை வணிக ரீதியாக இனப்பெருக்கம் செய்ய, கால்நடை சேவை துறையில் உரிமம் பெறுவது அவசியம். நாய், பூனை என, எந்த செல்லப்பிராணியாக இருந்தாலும், எந்த வயதில், எத்தனை முறை இனப்பெருக்கத்திற்கு உட்படுத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் உள்ளன.
பல்வேறு இன நாய்களை, இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்கிறேன். ஒரு வயதுக்கு மேல், நாய்களை இனப்பெருக்கத்திற்கு உட்படுத்துவது நல்லது. எந்த இன பப்பியாக இருந்தாலும் அதன் ஆரோக்கியம், சராசரி ஆயுட்காலத்தை பொறுத்து அதிகபட்சம், 5-8 வயது வரை இனப்பெருக்கத்திற்கு உட்படுத்தலாம். ஒவ்வொரு இனப்பெருக்கத்திலும், 4-6 குட்டிகளை ஈனும் போது, தாய் நாயின் பிரசவம், பேறு காலத்திற்கு பிந்தைய கவனிப்பிலும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். அடிக்கடி பப்பிகளை இனப்பெருக்கத்திற்கு உட்படுத்த கூடாது.
பப்பிகளை இனப்பெருக்கத்திற்கு உட்படுத்தும் முன் அவை ஆரோக்கியமாக இருப்பதற்கான, கால்நடை மருத்துவரின் சான்றிதழ் பெறுவது அவசியம். மரபு ரீதியாக எந்த நோயும் இல்லாத பட்சத்தில் மட்டுமே ஆரோக்கியமான குட்டிகளை ஈன முடியும். இதுபோன்ற பல்வேறு விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
மலேசியாவில் 50 சதவீத குடும்பங்களில், பப்பி, பூனையை செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர். ஒன்றுக்கும் மேற்பட்ட செல்லப்பிராணி வளர்ப்பவர்களே ஏராளம். எனவே விலங்குகளுக்கும், மனிதர்களுக்குமான தொடர்பு ஆரோக்கியமானதாகவும், மிக நெருங்கியதாகவும் இருக்கிறது. ஒரு நல்ல ப்ரீடரை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற புரிதல் மக்களிடம் இருக்கிறது.
பப்பி வாங்கும் முன் அவற்றின் பெற்றோர் யார், அதனோடு பிறந்த மற்ற குட்டிகளை பற்றி அறிந்த பிறகே, தனக்கான செல்லப்பிராணியை தேர்ந்தெடுப்பர். செல்லப்பிராணிகளை வாங்கிய பிறகு, அதை துன்புறுத்துவது, முறையாக உணவளிக்காமல், பராமரிக்காமல் இருப்பது தெரியவந்தால், மூன்று ஆண்டுகள் வரை சிறைதண்டனையும், 20,000 - 1,00,000 மலேசியன் ரிங்கிட் அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 4 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாய் வரை, அபராதம் விதிக்கப்படும்.
இதேபோல, வெவ்வேறு இன பப்பிகளை, 'கிராஸ் ப்ரீட்' செய்யவும் அனுமதியில்லை. அப்படி செய்யும் பட்சத்தில், ஒரு இனத்தின் எதிர்மறை தன்மைகள் மேலோங்குவதோடு, அதன் உடலமைப்பு, குணாதிசயம் என அனைத்திலும் வேறுபாடுகள் ஏற்படும். இதுசார்ந்த விழிப்புணர்வு மக்களுக்கு அதிகம் இருப்பதால், போலியாக இத்துறையில் நீண்டநாட்கள் நீடிக்க முடியாது.
மலேசியா மட்டுமல்ல, பல வளர்ந்த, வளரும் நாடுகளில், செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளுக்கு ஆதரவான சட்டங்கள், விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம், விலங்குகளை பராமரிக்க வேண்டிய பொறுப்பு, மனிதர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதற்காக தான். விலங்குகள் மீதான குறைந்தபட்ச கருணை, அவற்றை சுதந்திரமாக வாழ அனுமதிப்பதே, என்றார்.

