வங்கி ஊழியரின் கனவு... 'ஊர் காவலர்களுக்கான' விடுதி!
வங்கி ஊழியரின் கனவு... 'ஊர் காவலர்களுக்கான' விடுதி!
ADDED : டிச 07, 2024 09:10 AM

''பப்பியிடம் இருந்து, அப்படி என்னதான் கிடைக்கிறது என்ற கேள்வி மட்டும் என்னை துரத்திக்கொண்டே இருக்கிறது. மழையை போல பரிசுத்தமான அன்பை, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அதன் குறும்புத்தனத்தை, எப்படி சொல்லி புரிய வைப்பேன்? 'குட்டிச் செல்லம்' இல்லா எனக்கு, தொப்புள் கொடி பந்தத்தை உணர்த்தியவை, இந்த பப்பிகளே! எதிர்காலத்தில் ஆதரவற்ற தெருநாய்களுக்கான விடுதி கட்ட வேண்டுமென்பதை தவிர பெரிய கனவு, லட்சியம் எதுவுமில்லை,'' என்கிறார், சென்னை, கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த, தனியார் வங்கி ஊழியர் ஸ்ரீஜா மணிகத்.
நம்மிடம் அவர் பகிர்ந்தவை:
எனக்கு திருமணமான சில ஆண்டுகளிலேயே, குழந்தைப்பேறு இருக்காது என்பதை தெரிந்து கொண்டேன். செல்லப்பிராணிகள் பிடிக்கும் என்பதால், கணவர் எட்வின் ஒரு ஜெர்மன் ஷெப்பர்டு (நாலா) பப்பி வாங்கித்தந்தார். அவனுடைய குறும்பு, சேட்டையிலே நாட்கள் கரைந்தன.
கொரோனா தொற்று வேகமாக பரவிய சமயத்தில், திடீரென நாலா-வுக்கு உடல்நிலை சரியில்லை. போராடி அவனை மீட்டெடுத்த பிறகு, கவனிப்பாரின்றி பட்டினியால் வாடும் தெருநாய்கள் மீது கவனம் திரும்பியது. இன்றுவரை, வீட்டை சுற்றியுள்ள, 25 தெருநாய்களுக்கு, தினசரி உணவளிக்கிறேன். இவற்றிற்கு, முறையாக தடுப்பூசி போட்டுள்ளதோடு, கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.
எங்கேயாவது தெருநாய்களுக்கு அடிபட்டாலோ, பட்டினியால் பப்பிகள் கத்தி கொண்டிருந்தாலோ, தெரிந்தவர்கள், நண்பர்கள் மூலமாக தகவல் தெரியவரும். அவற்றை மீட்டு சிகிச்சை பெற ஏற்பாடு செய்வேன். இதில், மீண்டும் தெருவில் விட முடியாத அளவுக்கு, விபத்தில் காயமுற்றவை, கண் தெரியாத பப்பி, உணவு குழாய் பிரச்னையால், சாப்பிடவே சிரமப்படும் ஒரு பப்பி என, 7 நாய்களை, வீட்டில் வைத்து பராமரிக்கிறேன்.
என் நண்பர் ராஜா, பப்பிகளுக்கு உணவளிக்க உதவுகிறார். வெளியூரில் தொடர்ச்சியாக இரு நாட்கள் கூட, தங்க முடியாது. இப்படி, சின்னதாகவோ, பெரியதாகவோ, எதை இழந்தாலும், இவைகளின் அன்பு மட்டும் போதும் என்பதே எங்களின் கொள்கையாகிவிட்டது.
தவமின்றி கிடைத்த வரமே!