ADDED : ஏப் 05, 2025 06:14 AM

''பப்பி, மியாவ் போலவே, பறவைகளுக்கும் பயிற்சி அளிக்கலாம்,'' என்கிறார், கோவையை சேர்ந்த ரோகிணி பிரியா.
மைட்டி பெதர்ஸ் (Mighty Feathers) நிறுவனம் நடத்தும் இவர் கூறியதாவது:
சின்ன வயதிலிருந்தே பறவை வளர்க்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. முதலில், ஒரு சன்கனுார் (லக்கி) வாங்கினோம். பின், நான்கு ஜோடி காக்டெய்ல் வீட்டிற்குள் வந்தது. வீடே பறவைகளின் கொஞ்சல் மொழியில், நிறைந்திருக்கிறது. பறவை வளர்ப்பில், நாங்கள் கற்ற பாடங்களை பிறருக்கும் பகிரவே, சமூக வலைதளத்தில் பக்கம் துவக்கி நிறைய தகவல்களை பதிவிட்டு வருகிறோம்.
அதீத உணவு கூடாது
பறவை வளர்ப்பவர்களில் பலர் செய்யும் பொதுவான தவறு, அதிகமாக உணவு கொடுப்பது; வீட்டில் சமைத்ததை கொடுப்பது. இது செரிக்காததால், வயிறு சார்ந்த நோய்கள் ஏற்பட்டு, பறவைகள் அவதிப்படும்.
'குட்டி'யாக இருக்கும் போது பறவை வாங்குவதே சிறந்தது. கையில் உணவு கொடுத்து பழக்கும் போது, உரிமையாளரை அது தன் தாயாகவே கருதும். தாமாக உணவு சாப்பிட தொடங்கும் சமயத்தில் விதை நீக்கிய பப்பாளி, ஆப்பிள், கொய்யா தரலாம். சீதோஷ்ண நிலைக்கேற்ப நட்ஸ், விதைகள் ஒருவேளை கொடுத்தால் ஆரோக்கியமாக வளரும்.
காற்றோட்டமான சூழல்
காற்றோட்டம், சூரியவெளிச்சம் படும் இடத்தில், பறவைக்கான கூண்டு வைக்க வேண்டும். இதற்கான சூழல் இல்லாதபட்சத்தில், தினசரி குறிப்பிட்ட நேரம், சூரிய வெளிச்சம் படும் இடத்தில் பறவைகளை கொண்டு செல்வது அவசியம். பறவையை குறிப்பிட்ட இடத்திற்குள் வைத்து வளர்ப்பதால் விளையாட போதுமான பொருட்களை, கூண்டில் வைப்பது அவசியம். எதையாவது கடித்து கொண்டே இருந்தால் தான், அவை 'ஸ்ட்ரஸ்' இல்லாமல் இருக்கும்.
பயிற்சி அவசியம்
'ஹாரன்ஸ்' என அழைக்கப்படும் பறவைக்கான கயிறு, கடைகளில் கிடைக்கிறது. இதை, பறவையின் காலில் பொருத்தி, கயிறை பிடித்து கொண்டு, தோளில் அமர வைத்து வெளியிடங்களுக்கு அழைத்து செல்லலாம்.
ஆரம்பத்தில், இப்பயிற்சியின் போது, வீட்டிற்குள் பறவையை பழக்க வேண்டும். பின் மெல்ல வெளியிடங்களுக்கு அழைத்து சென்று, புற சூழல், இரைச்சல், சத்தம், வித்தியாசமான மனிதர்களை அறிமுகம் செய்ய வேண்டும். இதற்கு பிறகு, வாகனத்தில் செல்லும் போது, தோளில் அமர வைத்து சென்றாலும், எங்கேயும் பறந்து செல்லாது. பயம், பதற்றம் இல்லாமல், பயிற்சி அளித்தால் தான், அவை உங்களை நம்பி ஊர் சுற்ற தயாராகும்.