எல்லாம் இருக்கும் 'இல்லம்'; இங்கே வரலாம் உங்க செல்லம்!
எல்லாம் இருக்கும் 'இல்லம்'; இங்கே வரலாம் உங்க செல்லம்!
ADDED : மே 31, 2025 06:55 AM

விடுமுறை நாட்களில் வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லலாம் என்றால், வீட்டின் கடைக்குட்டி செல்லங்களான பப்பி, மியாவ்களை எங்கு தங்க வைப்பது, யாரை நம்பி விட்டு செல்வது என்ற கேள்வி தான் முதலில் வந்து நிற்கும். அந்த கவலையே இனி வேண்டாம் என்கிறார், கோவை, வடவள்ளியில் செயல்படும் சத்தியம் பெட் ரெசார்ட் உரிமையாளர் மதன்குமார்.
பப்பி, மியாவ் மட்டுமல்லாமல், குதிரைகளுக்கும் தனியாக தங்குமிடம் அமைத்து, பராமரித்து வரும் இவர், செல்லமே பக்கத்திற்காக நம்மிடம் பகிர்ந்தவை:
செல்லப்பிராணிகளுடனேயே வளர்ந்ததால் அவற்றின் தேவை என்ன என்பது தெரியும். வெளியூருக்கு செல்லும் போதெல்லாம், யாரிடம் ஒப்படைப்பது, எங்கு தங்க வைப்பது என்ற, தேடல் தான் அதிகமிருக்கும். எங்கே விட்டு சென்றாலும், செல்லப்பிராணி பற்றிய நினைவாகவே இருக்கும். என்னை போலவே இத்தேடல் கொண்டவர்களுக்காகவே, பெட் ரெசார்ட் தொடங்கினோம்.
இங்கே, 10 பப்பிகள் வரை தங்க வைக்க பிரத்யேக அறை உள்ளது. பெரிய வகை பப்பிகளும் தங்க போதுமான இடவசதி இருக்கிறது. காற்றோட்டமான சூழலில் ரெசார்ட் இருப்பதால், பப்பிகள் உள்ளே வந்தால், குஷியாகிவிடும். இவை, விளையாடுவதற்கென தனியிடம் உள்ளது. இங்கே தங்க வைக்கப்படும் பப்பிகளுக்கு, குரூமிங் செய்வதோடு, பயிற்சியும் அளிக்கிறோம்.
பப்பி மட்டுமல்லாமல், குதிரைக்கும் பிரத்யேக தங்குமிடம் உள்ளது. குதிரைக்கு தினசரி குரூமிங் செய்து, ஓட்டப்பயிற்சி வழங்குகிறோம். உரிமையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, உணவு பட்டியல் தயாரித்து வழங்குகிறோம். கால்நடை மருத்துவர்கள் அவ்வப்போது வந்து, உங்கள் செல்லப்பிராணிகளின் உடல்நலன் குறித்து பரிசோதனை செய்வர்.
ரெசார்ட் முழுக்க, சி.சி.டி.வி., கேமரா வாயிலாக கண்காணிக்கப்படுவதால், செல்லங்களின் பாதுகாப்பு பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் வீட்டிற்கே நேரில் வந்து செல்லங்களை அழைத்து செல்ல, டாக்ஸி வசதியும் உள்ளது. எந்த கவலையும் இல்லாமல், நீங்கள் வெளியூர் பயணங்களை மேற்கொள்ளலாம்.
செல்லப்பிராணியுடன் வெளியூர்களில் இருந்து, கோவைக்கு வருவோர் தங்குவதற்கு, பிரத்யேக 'ஏசி' அறை உள்ளது. இங்கே, செல்லப்பிராணியின் உரிமையாளர் தவிர, யாரையும் அனுமதிப்பதில்லை. கிச்சன் இருப்பதால், செல்லப்பிராணிக்கும், தங்களுக்கும் பிடித்ததை சமைத்து சாப்பிடலாம்.
இங்கே, உங்கள் செல்லங்களுடன் வித்தியாசமான போஸ்களில் போட்டோ எடுக்க பிரத்யேக இடம் இருப்பதால், மறக்காமல் 'கிளிக்' செய்து, நினைவுகளாக்கி கொள்ளலாம். ஒருமுறை இங்கே வந்து தங்கினால், மீண்டும் அழைத்து செல்லுமாறு, உங்கள் செல்லம் அடம்பிடிக்கும், என்றார்.