ஒரு 'வெப் டிசைனரின்' நெடுங்கனவு!: ஆதரவற்ற விலங்குகளின் ரட்சகன்
ஒரு 'வெப் டிசைனரின்' நெடுங்கனவு!: ஆதரவற்ற விலங்குகளின் ரட்சகன்
ADDED : மார் 02, 2024 10:21 AM

மனிதம் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது; 23 வயதில், 283 ஆதரவற்ற விலங்குகளை காப்பாற்றி, காப்பகத்தில் தங்க வைப்பது சாதாரண காரியமல்ல. பிற உயிர்களை அரவணைத்து காப்பாற்றி வருகிறார் சென்னை, போரூரை சேர்ந்த வெப் டிசைனர் சாய்விக்னேஷ்.அவர் கூறியது: சின்ன வயசுல இருந்தே தெருநாய்களுக்கு சாப்பாடு போடுவேன். என் தாத்தா, பாட்டி தான் சமைச்சு கொடுப்பாங்க. அவர்களை போலவே நானும்... எங்க வீட்டில் நான் ஒரே மகன். கடந்த 2015ல் மிக்ஜாம் புயல் சென்னை வாசிகளோட இயல்பு வாழ்க்கைய தலைகீழா புரட்டி போட்டுச்சு. மக்களுக்கு உதவி செய்ய பலரும் களமிறங்கினாங்க. நான் பராமரிப்பின்றி பரிதவித்த தெருநாய்களை தேடி அலைஞ்சிட்டு இருந்தேன். வெள்ளத்துல தத்தளிச்ச 20 நாய்களை வீட்டிற்கு கொண்டு வந்தேன்.
அடுத்த ஒரே மாசத்துலயே ஹவுஸ் ஓனர்ல இருந்து அக்கம்பக்கத்துல இருக்கவங்க, பால்காரர், கீரை விக்கிறவர்னு எல்லாரும் கம்ப்ளைண்ட் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. வீடு மாத்துற படலம் தொடர்ந்துக்கிட்டே இருந்துச்சு. இதுக்கு இடையில, தெருவுல தனியா அடிப்பட்டு கிடக்குற மாடு, ஆடு, குதிரைன்னு பல விலங்குகளயும் மீட்டேன்.
காயத்துக்கு மருந்து வாங்கித்தர மட்டும் தான் என்னால முடிஞ்சுது. இவைகளை தனியா ரோட்டுல விட்டுட்டு போகவும் முடியல. என்னோட பணிகளை பார்த்து திருநின்றவூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சிவமணி, திருவள்ளூர் மாவட்டம், சென்றாயன்பாளையத்துல இருக்க தன்னோட எட்டு ஏக்கர் நிலத்தை இலவசமா கொடுத்தார்.
என்னோட பூர்வீக வீட்டை விற்று கிடைச்ச பணத்துல விலங்குகள் காப்பகம் கட்டுனேன். இப்போ இங்க 130 மாடு, பசு, காளை, எருமைகள், 111 தெருநாய், 27 ஆடு, 9 கோழி, சேவல், 2 குதிரை என மொத்தம் 283 விலங்குகள் இருக்கு. தெருவோரங்கள்ல தனிச்சுவிடப்படுற விலங்குகள் எங்கிருந்தாலும் போன் மூலமா தகவல் தெரிவிச்சா உடனே மீட்டு, தங்க வைச்சிக்கிறேன்.
ஒவ்வொரு விலங்குக்கும் வெவ்வேறு உணவுமுறை, பராமரிப்பு, குணாதிசயம் இருக்கும். 15 பேர் வேலை செய்றாங்க. ஒரு டாக்டர் தினமும் வந்து விசிட் அடிப்பார். நிறைய தன்னார்வலர்கள் செலவுக்கு பணம் கொடுக்குறாங்க. பட்ஜெட் போட்டு காப்பகத்த நடத்த முடியாது. எதிர்பார்க்காத செலவுகள் வரும்போதெல்லாம் யாராவது உதவி செய்றாங்க... என்றார்.இவரை தொடர்பு கொள்ள: 89393 20846

