ADDED : பிப் 03, 2024 09:04 AM

'என்னை பார்த்தாலே ஒருவித பரவசத்துடன் பாய்ந்தோடி வருவான் குண்டாஸ். பேசத்தெரியாவிட்டாலும் அன்பிற்குரியவர்களை கண்டதும் ஆரவாரம் செய்வதும், ஆர்ப்பரிப்பதும் வாயில்லா ஜீவன்களின் தனி சிறப்பு. அவற்றின் வாஞ்சையான சேட்டைகளை ரசிப்பதிலும் ஒரு அலாதி பிரியம் இருக்கிறதே அப்பப்பா' என்கிறார், கிடா வளர்ப்பில் பட்டையைக் கிளப்பும் 14 வயது பத்தாம் வகுப்பு மாணவி கனிஷ்கா.
இவர் கோவை மாவட்டம், பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்தவர். தந்தை ரங்கராஜ், காய்கறி வியாபாரி. 'மயிலாம்பாடியில் இருந்து, 45 நாள் குட்டியாக வாங்கி வந்த கிடாவை செல்லமாக வளர்த்து வருகிறேன். பார்க்கவே மிரட்டலான கொம்புகளுடன், சண்டைக்கு வர்றையா என்பது போன்றிருக்கும் இவனது பெயர்தான் குண்டாஸ். ரெண்டு வயசுதான் ஆகிறது. நல்லா தீவனம் சாப்பிடுவான். அதனால 'குண்டாஸ்'னு பெயர் வச்சேன். 'பிகில்' வெளியானபோது நான் வாங்கின வேறு ஒரு கிடாவுக்கு 'பிகில்'னு பேரு வச்சேன். அவன் ரொம்பவே டென்ஷன்பார்ட்டி; யாரையும் கிட்டவே விடமாட்டான். இந்த குண்டாஸ் அப்படியில்லை; பாசக்காரன்.
என் குரல் கேட்டாலே ஓடி வந்துவிடுவான்; என் கூடவே நடப்பான்; எதுவும் பண்ண மாட்டேன். அவனுக்கு, நீச்சல் உள்ளிட்ட பயிற்சி கொடுத்துள்ளேன். அவன் தான் என் பெஸ்ட் ப்ரண்ட். விடுமுறை நாளில், நான் மொபைல்போனை தொடவே மாட்டேன். குண்டாஸ் கூட தான் விளையாடி பொழுதை கழிப்பேன். இவன்முன்னாடி யாராவது என்னை தொந்தரவு செய்தால் அவ்வளவுதான், பாய்ந்து வந்து முட்டிய பேத்துருவான். என்னோட 'பாடிகாட்'னு கூட சொல்வேன்' என, கெத்தாக சொன்னார் கனிஷ்கா.
ஆஹா, நல்லா பார்த்துக்கோங்க மக்களே; இவங்க வூட்டுப்பக்கம் போனா, மூட்டு இருக்காதுபோல...!

