ADDED : நவ 08, 2025 01:08 AM

''வெளிநாடுகளில் பறவை வேட்டைக்கு செல்லும் போது, துப்பாக்கியால் அதை சுட்டதும், எடுத்து வந்து தருவதற்காக பயன்படுத்தப்பட்டது தான் இந்த காக்கர் ஸ்பானியல். காற்றில் தாவி கேட்ச் பிடிக்கும் என்பதால் குழந்தைகளுடன் பந்துவிளையாட ஏற்ற துணையாக இது இருக்கும்,'' என்கிறார், மதுரையை சேர்ந்த தீபன்.
இவர், காக்கர் ஸ்பானியல் பப்பி ப்ரீடராக உள்ளார். பி.ஆர்க்., பட்டதாரியான இவர், இப்பப்பியின் தனித்துவம்குறித்து நம்மிடம் பகிர்ந்தவை:
அமெரிக்கன், இங்கிலீஷ் என இரண்டு வகைகளாக காக்கர் ஸ்பானியல் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. கென்னல் கிளப் ஆப் இண்டியா அமைப்பால், துப்பாக்கியால் சுடுவதை மீட்டு தருபவையான 'கன் டாக்' (Gun Dog) பட்டியலில், இந்த காக்கர் ஸ்பானியல் பப்பியை இணைத்துள்ளனர். வெளிநாடுகளில் பறவை வேட்டைக்கு செல்லும் போது, உதவிக்கு அழைத்து செல்ல, இனப்பெருக்கம் செய்யப்பட்டது. துப்பாக்கியால் சுட்டு கீழே விழும் பறவை, தரையில் இருந்தாலும், நீரில் விழுந்தாலும், இது பாதுகாப்பாக மீட்டு தரும்.
உடல் முழுக்க புஸூ புஸூவென மிருதுவான முடி, ஆடு மாதிரி தொங்கும் காதுகள், பெரிய கண்கள், நீளமான முகம் என பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கும்இந்த பப்பி, அதிகபட்சம் 40-42 செ. மீ., உயரம் வளரும். 10- 14 கிலோ எடை கொண்டது. இதை அப்பார்ட்மென்ட் போன்ற குறைந்த இடவசதியிலும், வளர்க்கலாம்.
பிரத்யேக பயிற்சியாளர் கொண்டு, பயிற்சி வழங்க வேண்டிய அவசியமில்லை. பப்பியாக இருக்கும் போதே, சில உத்தரவுகளை பிறப்பித்து, நீங்களே சொல்லி கொடுத்தால், அப்படியே கேட்டு நடந்து கொள்ளும். குழந்தைகளுடன் எளிதில் நெருங்கிவிடும். இது தன் ஆற்றலை செலவழிக்க, தாமாகவே நடந்து, ஓடி, விளையாடி ஈடுகட்டு கொள்ளும். எதையும் எளிதில் கற்று கொள்ளும்.
கருப்பு, பிரவுன், சிவப்பு, சில்வர் என, பல நிறங்களில் இருப்பதால், பப்பியை பார்த்ததும் வாங்க ஆசைப்படுவர். இதற்கு உடல் முழுக்க முடி இருப்பதால், தினசரி சீவி விட நேரம் ஒதுக்க வேண்டும். பருவநிலை மாறும் போதெல்லாம் இதற்கு முடி உதிர்வு இருக்கும். இதன் முடியை பராமரிக்க, விட்டமின் மருந்துகள் சாப்பிட கொடுக்கலாம்.
வீட்டிற்குள் உங்களை சுற்றி சுற்றி வலம்வர, வித்தியாசமான பப்பி வாங்க ஆசைப்படுவோருக்கு, இது சிறந்த தேர்வாக இருக்கும். இதனுடன் விளையாட விரும்பினால், எதையாவது துாக்கி போட்டு எடுத்துவர உத்தரவிட்டால் குஷியாகிவிடும், என்றார்.

