ADDED : டிச 07, 2024 09:14 AM

''சென்னைவாசிகளுக்கு, வார இறுதி நாட்களில் தான், சொர்க்கத்தின் கதவுகள் திறந்தாற்போன்ற மனநிலை, மெல்ல எட்டி பார்க்கிறது. இந்நாட்களில், செல்லப்பிராணிகளுடன் நேரம் செலவிட விரும்புவோருக்காகவே 'பா பார்டி' நிறுவனம் துவங்கினேன்,'' என்கிறார், அதன் நிறுவனர் அக் ஷயா.
சென்னையை சேர்ந்த இவர், செல்லப்பிராணிகளுக்கான பொழுதுபோக்கு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
'செல்லமே' பக்கத்திற்காக, நம்மிடம் பகிர்ந்தவை:
நான் படித்தது, பி.டெக்., ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங். சின்ன வயதில் இருந்தே, செல்லப்பிராணிகளின் நலம் சார்ந்த சுய தொழிலில், ஈடுபட வேண்டுமென்ற உந்துதல் இருந்தது. திருமணத்திற்கு பிறகு, வீட்டில் ஐந்து பப்பி வைத்திருந்தேன். இவைகளுடன் வெளியிடங்களுக்கு செல்வது, பொழுதுபோக்கில் ஈடுபடுவதற்கான விஷயங்கள், மிக மிக குறைவாகவே இருந்தன.
அதனால், செல்லப்பிராணிகளுக்கான ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் துவங்க முடிவெடுத்தேன். இதை கணவர் அஞ்சனிடம் தெரிவித்த போது பச்சை கொடி காட்டினார். கரும்பு தின்ன கூலியா என்பது போல, மனதுக்கு நெருக்கமான துறையை, என் அடையாளமாக மாற்றி கொண்டேன். கடந்த ஓராண்டில் மட்டும் 10க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறேன்.
செல்லப்பிராணிகளுக்கான நிகழ்ச்சிக்கு, ஏற்பாடு செய்வது சாதாரண காரியமல்ல. ஒவ்வொரு ப்ரீடும் வெவ்வேறு குணாதிசயம் கொண்டிருக்கும். எல்லா வகை பப்பிகளுக்கும் பிடித்த வகையில், என்னென்ன விஷயங்களை ஒருங்கிணைக்கலாம் என பட்டியலிட வேண்டும். ஒவ்வொரு முறை நிகழ்ச்சி நடத்தும் போதும், சில வித்தியாசமான முன்னெடுப்புகள் இருந்தால் தான், மக்கள் விரும்புவர்.
செல்லப்பிராணிகளுக்கான விளையாட்டு, பேஷன் ஷோ மட்டுமல்லாமல், கால்நடை மருத்துவர், பயிற்சியாளர், ஊட்டச்சத்து நிபுணர் என, இத்துறை சார்ந்த வல்லுநர்களை வரவழைத்து, சந்தேகங்களை கேட்டறிய ஏற்பாடு செய்கிறேன். பொது இடங்களுக்கு அழைத்து செல்வது, பிறருடன் பழக விடுதல் என, செல்லப்பிராணியை ஆக்டிவ்வாக வைத்திருப்பதற்கான, பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துகிறேன். ஒவ்வொன்றுக்கும் ஒரு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இத்துறையின் தேவையை புரிந்து கொண்டு, சுய தொழிலில் ஈடுபட முன்வருவோருக்கு, நல்ல எதிர்காலம் உண்டு.