ADDED : ஆக 01, 2025 07:32 PM

சி ட்ஜூ, பக், லசாப்சோ, மின்பின், டாய் பொமரேனியன், சுவாவா, டாய் பூடில் போன்ற சிறிய வகை பப்பிகளை தான், பெரும்பாலானோர் வளர்க்கின்றனர். இவை அளவில் சிறியதாக, எடை குறைவாக இருப்பதால், யார் வேண்டுமானாலும், எளிதில் கையாள முடியும். வாக்கிங் அழைத்து செல்வது, வெளியிடங்கள், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதும் எளிது. ஆனால், சிறிய வகை பப்பி வளர்ப்பவர்கள், சில பராமரிப்பு விஷயங்களில் கவனக்குறைவாக இருப்பதால், அவை இளம் வயதிலே நோய் தொற்றுக்கு ஆளாகி சிரமப்படுகின்றன.
பல் பராமரிப்பு
இவை பெரும்பாலும் அதிக முடி கொண்டவையாக இருப்பதால் தினசரி சீவிவிடுவது, பாதம், கழிவு வெளியேறும் இடம், கண்களை சுற்றி இருக்கும் முடிகளை அடிக்கடி வெட்டிவிடுவது அவசியம். கண்களை சுற்றியிருக்கும் முடியால், கருவிழியில் புண்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
தினசரி பற்களை சுத்தப்படுத்த வேண்டும். வாக்கிங் அழைத்து செல்லும் போது, உடலுடன் இணைக்க கூடிய பெல்ட் அணிவிப்பதே சிறந்தது. கழுத்தில் மாட்டிவிடும் பெல்ட்டை அவை இழுத்தால் தொண்டை பகுதி பாதிக்கப்படலாம். இவை சிறியதாக இருப்பதால், வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல பலரும் விரும்புவர். ஆனால், அதீத அலைச்சல், நிறைய உடற்பயிற்சிகளால் இவை எளிதில் சோர்வடைந்துவிடும். ஹீட் ஸ்ட்ரோக் இவ்வகை பப்பிகளுக்கே அதிகம் ஏற்படும் என்பதால், வெயில் காலங்களில் இவற்றின் பராமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.
அனுமதித்தால் ஆபத்து
சிட்ஜூ இன பப்பிகளுக்கு கண்கள் சற்று வெளியே தெரியும் வகையில் இருக்கும். இவற்றின் கருவிழி பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். சில நேரங்களில் பார்வை இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால், இவற்றை பெரிய வகை பப்பிகளுடன் விளையாட அனுமதிக்க கூடாது.
பக் இன பப்பியின் முகத்தில் சில மடிப்புகள் இருக்கும். இப்பகுதியை தினசரி சுத்தம் செய்ய வேண்டும். இதில் ஈரப்பதம், அழுக்குகள் சேர்ந்துவிட்டால், பூஞ்சை, பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதேபோல, இவை குட்டியாக இருப்பதால், துறுதுறுவென ஓடி கொண்டே இருக்கும். சிறியதாக இருக்கும் போதே, குதிப்பது, தாவுவது போன்ற செயல்களில் ஈடுபட அனுமதிக்க கூடாது. உயரமான இடங்களில் இருந்து இவை குதித்தால், கால் எலும்பு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதிக உணவு கூடாது. பெரிய வகை பப்பிகளை காட்டிலும், இவை சீக்கிரம் இனப்பெருக்கத்திற்கு தயாராகிவிடும். இனப்பெருக்கம் செய்ய விரும்பாதவர்கள், இவை முதல் பருவத்தை அடைந்ததும், கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது நல்லது. இனப்பெருக்கம் செய்வதாக இருந்தால், கால்நடை மருத்துவரின் ஆலோசனைக்கிணங்க, உரிய கால இடைவெளியை பின்பற்றி, தயார்ப்படுத்த வேண்டும்.
சிறியதாக இருப்பதால், சிலர் அதீத செல்லம் கொடுத்து, அடிக்கடி உணவு சாப்பிட கொடுத்து, உடல் எடையை அதிகப்படுத்திவிடுவர். இது, பப்பியின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு நல்லதல்ல. இப்படி, அடிப்படையான சில விஷயங்களை தெரிந்து கொண்ட பிறகு, பப்பி வாங்கினால், அவை தன் ஆயுட்காலம் முழுக்க, ஆரோக்கியமாக வாழும்.
- ஆர்.பிரேம்சந்த், கால்நடை மருத்துவர், திருச்சி.