ADDED : டிச 28, 2024 06:45 AM

குளிர்காலத்தில், சீதோஷ்ண நிலை காரணமாக செல்லப்பிராணிகளுக்கு சில நோய் தொற்று பரவல் அதிகமாக இருக்கும். 'கெனைன் டிஸ்டெம்பர்' என்ற வைரஸ், இக்குளிர்காலத்தில் பப்பிகளின் நரம்பு மண்டலத்தை தாக்கும் வாய்ப்பு அதிகம். கண்களில் ஒருவித திரவம் வெளியேறி கொண்டே இருத்தல், வாந்தி, அடிவயிற்றில் கொப்புளம், வலிப்பு, அடிக்கடி கீழ்தாடை பகுதி படபடவென அடித்தல், நடக்க முடியாமை போன்றவை இதன் அறிகுறிகளாகும். பப்பி பிறந்து, 42 வது நாளில், டிஸ்டெம்பர், பார்வோ, எலிகாய்ச்சல் போன்ற வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காக்க தடுப்பூசி போடப்படும். இதன்பிறகு, 21 நாட்கள் கழித்து பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும்.
மனிதர்களுக்கு குளிர்காலத்தில் பரவும் ப்ளூ காய்ச்சல், நிமோனியா போன்றவை பப்பிக்கும் பரவும். சளி, இருமல், மூக்கில் நீர் ஒழுகுதல், பசியின்மை, காய்ச்சல் உள்ளிட்ட சில அறிகுறிகள் இருந்தால், உடனே கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்வது அவசியம். இந்நோய் தொற்று பரவாமல் இருக்க வெளியிடங்களுக்கு செல்லப்பிராணிகளை அழைத்து செல்லும் போது, 'மவுத் கேப்' அணிவிப்பது, தடுப்பூசி போடாத பப்பிகளுடன் சேர்ந்து விளையாட அனுமதிக்காமல் இருத்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
- மு.சரவணன், கால்நடை உதவி மருத்துவர், கோவை.

