ADDED : செப் 07, 2024 11:47 AM

தெருநாய் தத்தெடுக்கும் பட்சத்தில், அதை உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவரிடம் பரிசோதித்து, அதன் வயது, உடல்நிலை பற்றிய ரிப்போர்ட் பெறுவதோடு, முறையாக தடுப்பூசி போடுவது அவசியம்.
பொதுவாக, பிறந்த 45 நாளில் பப்பிக்கு முதல் தடுப்பூசி போடப்படும். பின் 21 நாட்கள் இடைவெளியில், முதல் பூஸ்டரும், அடுத்த 21 நாட்களில் 2வது பூஸ்டரும் போடப்படும். மூன்றாவது மாதத்தில் ரேபிஸ் தடுப்பூசி போடப்படும். இதற்கான பூஸ்டர் தடுப்பூசி, 21 நாட்கள் இடைவெளியில் போடுவது அவசியம்.
இந்த ஐந்து தடுப்பூசிகளும் போடாவிடில், 'பார்வோ' போன்ற கொடிய வைரஸ் தாக்குதலில் இருந்து பப்பியை குணப்படுத்துவது கடினம். தொடர்ந்து ரத்தத்துடன் பேதி, வாந்தி போன்ற அறிகுறிகளோடு, இறுதியில் இதயத்தை பாதித்து, இறப்பை ஏற்படுத்திவிடும்.
இதேபோல, 'கொனைன் டிஸ்டெம்பர்' வைரஸ், பப்பியின் நரம்பு மண்டலத்தை தாக்கி, தொடர்ந்து வலிப்பு ஏற்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, இறப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அபாயகரமானது. எனவே, எந்த வயதில் ஒரு நாயை தத்தெடுத்தாலும், வாங்கினாலும், அவை தடுப்பூசி போடாத பட்சத்தில், உடனே செலுத்துவது அவசியம்.
- கே. கலைசெல்வி, கால்நடை மருத்துவர், சிவகங்கை.