உங்கள் பப்பிக்கு பயிற்சி அளிக்காவிடில்... என்னாகும் தெரியுமா?
உங்கள் பப்பிக்கு பயிற்சி அளிக்காவிடில்... என்னாகும் தெரியுமா?
ADDED : ஆக 09, 2025 01:39 AM

''செ ல்லப்பிராணியாக வீட்டிற்குள் வைத்திருந்தாலும் பயிற்சி அளிக்காமல், பப்பி வளர்க்காதீர்கள். சிறியதாக இருக்கும் போது செல்லமாக கொஞ்ச தோன்றும். ஆனால் அவை வளர்ந்தால், உங்களால் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம்,'' என்கிறார், சென்னையை சேர்ந்த நாய் பயிற்சியாளர் அபியேசர்.
பப்பிக்கான அடிப்படை பயிற்சிகள் குறித்து, சென்னையை சேர்ந்த 'டாகிஜோன்' என்ற பப்பி பயிற்சி மைய தலைவர் அபியேசர் நம்மிடம் பகிர்ந்தவை:
குழந்தைகள் விருப்பத்திற்காக பப்பி வாங்குவோரே அதிகம். ஆரம்பத்தில் பப்பியை கொஞ்சுவது, வாக்கிங் அழைத்து செல்வது என நன்றாக பார்த்து கொள்வர். பின்பு, அப்பணியை பெரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர்கள் நழுவி கொள்வர். வேறு வழியில்லாமல், வீட்டிலுள்ள பெரியவர்களும், அப்பப்பிக்கு வேண்டியதை செய்வர். ஆனால், சில மாதங்களிலே அதை கட்டுப்படுத்த முடியாமல், எப்படி கையாள்வது என தெரியாமல், விழிபிதுங்குவோரே அதிகம்.
இதுதான், இன்றைய பல வீடுகளின் நிலை. பப்பி வாங்க முடிவெடுத்ததும், எந்த நோக்கத்திற்காக, என்ன இன பப்பியை வாங்க வேண்டுமென்ற புரிதல் அவசியம். அதற்கு முறையாக பயிற்சி அளித்தால், இத்தனை சிரமங்கள் ஏற்படாது என்பது பலருக்கும் புரிவதில்லை.
சில ஆண்டுகளுக்கு முன், என்னிடம் ஜெர்மன் ஷெப்பர்டு இன பப்பி வாங்கிய ஒரு பெண்மணி, அதற்கு முறையாக பயிற்சி அளிக்காமல், வாக்கிங் அழைத்து செல்லாமல், வீட்டிற்குள்ளேயே வளர்த்து வந்துள்ளார். திடீரென ஒருநாள், மாடியில் இருந்து கீழே இறங்கும் போது, அதன் கழுத்துப்பட்டை கயிறை இழுத்தும் நிற்காமல் வேகமாக ஓடியதால், உரிமையாளர் படிகட்டில்தவறி விழுந்து, தலையில் பலமாக அடிப்பட்டதில், கோமாவுக்கே சென்றுவிட்டார்.
இதுபோல, செல்லப்பிராணியை முறையாக வளர்க்க தெரியாத ஒவ்வொரு வீடுகளிலும், நிறைய கதைகள் உண்டு. இதற்கு காரணம், பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்காததே. பப்பி பிறந்து மூன்று மாதத்தில் இருந்து, சில அடிப்படை விஷயங்களை தாமாகவே செய்து கொள்ள பயிற்சி அளிக்க வேண்டும். குறிப்பாக, வாக்கிங் செல்லும் போதே, கழிவுகளை வெளியேற்ற பழக்க வேண்டும்.குறிப்பிட்ட இடத்தில் சென்று சாப்பிடுவது, புதிய ஆட்கள் வீட்டிற்குள் வரும் போது, அதீதமாக குரைக்காமல், தாவாமல் இருப்பது, வீட்டிலுள்ள பொருட்களை சேதப்படுத்தாமல் இருப்பது,உரிமையாளரின் குரலுக்கு கட்டுப்படுவது போன்ற சில பயிற்சிகள் வழங்குவது மிக அவசியம்.
உங்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப, செல்லப்பிராணிகளை பழக்கப்படுத்த வேண்டும். இதற்கு, பிரத்யேக பயிற்சியாளர்கள் உள்ளனர். ஓரிரு மாதங்களிலே, உரிமையாளரை உடன் இருக்க செய்து, பயிற்சி முறைகளை கற்று தருவர். அப்போது தான், அப்பப்பி உங்களுக்கு கட்டுப்படும்.
பப்பி பிறந்து ஓராண்டுக்கு மேல், பயிற்சி அளிக்கும் போது, அதை உடனே பின்பற்றாது. தன் பழைய பழக்கவழக்கத்தை மாற்றி கொள்ளாமல் அடம்பிடிக்கும். ஆனால், முறையான தொடர் பயிற்சியால், அதையும் மாற்றிவிட முடியும். செல்லப்பிராணியாக தானே வளர்க்கிறோம் என, பயிற்சி அளிக்காமல் பப்பியை வளர்த்தால், அது எதற்காக வித்தியாசமாக நடந்து கொள்கிறது என்பதே தெரியாமல் போய்விடும். அதேபோல, எந்த இன பப்பியாக இருந்தாலும், அவற்றை குறிப்பிட்ட இடத்தில் கட்டி போட்டு, முறையாக பராமரிக்காவிடில், அவை அக்ரசிவ்வாக மாற அதிக வாய்ப்புண்டு. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேல் உங்களின் குடும்பத்தின் ஓர் அங்கமாக மாறும் செல்லப்பிராணிகளுக்கு, சில அடி ப்படை விஷயங்களை செய்ய, தயங்க கூடாது. இதை செய்ய தவறும் போது தான், பப்பி வளர்ப்பது சிரமமாகிவிடுகிறது, என்றார்.