டாக்டர்‛ஸ் கார்னர்: பூனைக்கு மணி கட்டலாமா! கால்நடை மருத்துவர் 'தீபன்ஷிகா'
டாக்டர்‛ஸ் கார்னர்: பூனைக்கு மணி கட்டலாமா! கால்நடை மருத்துவர் 'தீபன்ஷிகா'
ADDED : ஆக 03, 2024 11:27 AM

நாட்டு பூனைகளை காட்டிலும் வெளிநாட்டு இன பூனைகளை பெரும்பாலானோர் செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர். இது, சென்சிட்டிவான விலங்கு என்பதால், நோய் தொற்று தாக்குதலுக்கு எளிதில் ஆட்படும். எனவே, பராமரிப்பு விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
தடுப்பூசி போடுவதால்
பூனை பிறந்து 2 மாதத்தில், 'சி.ஆர்.பி.,' தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். இதை 21 நாட்கள் இடைவெளியில், மூன்று 'டோஸ்' போடுவது அவசியம். ரேபிஸ் தடுப்பூசி பிறந்து, 3 வது மாதத்தில் போடுவது அவசியம். இதோடு, ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். இதன்மூலம், உங்கள் பூனை மனிதர்களை தாக்கினாலோ, வேறு பூனைகளின் தாக்குதலுக்கு உட்பட்டாலோ, எவ்வித ஆபத்தும் ஏற்படாது.
வீட்டில் எத்தனை பூனைகள் வளர்த்தாலும் தனித்தனியாக, சிறுநீர் கழிப்பதற்கான 'லிட்டர் பாக்ஸ்' வைக்க வேண்டும். ஒரு பூனைக்குரியதை மற்றவை பயன்படுத்தினால், மீண்டும் அதே பாக்ஸில் சிறுநீர் கழிக்காது. மூன்று நாட்களுக்கு ஒருமுறை, லிட்டர் பாக்ஸ் சுத்தப்படுத்துவது அவசியம்.
ஆரோக்கியமான சந்ததி
பூனையை வெறும் செல்லப்பிராணியாக மட்டுமே வைத்து கொள்ள நினைப்போர், ஆறு மாதத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துவிடலாம். பிரீடிங் செய்ய முடிவெடுத்தால், பூனைகளை வெளிச்சத்தில் வைத்தால் தான், அதன் இனப்பெருக்க ஹார்மோன் சுரக்கும். கருவுற தயாராக இருக்கும் பூனை, இரவு நேரத்தில் துாங்காமல் சத்தமாக அழும். இடுப்பு பகுதி துாக்கியபடி நடக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், ஆண் பூனையுடன் வீட்டிற்குள் வைத்திருப்பது அவசியம்.
குளிர்காலத்தில் பூனைக்குட்டி பிறந்தால், அதற்கு சற்று சூடான தட்பவெப்ப சூழலை அமைத்து தர வேண்டும். குறைந்தபட்சம் 45 நாட்கள் வரை தாய்ப்பால் தவிர, பிற உணவுகள் கொடுக்கக்கூடாது. ஒருநாள் முழுக்க பூனை சாப்பிடாமல், சிறுநீர் கழிக்காமல் இருந்தால், உடனடியாக கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். இதில் அலட்சியம் காட்டினால், உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம்.
பூனைக்கு மணிகட்டினால்
பிற செல்லப்பிராணிகளை காட்டிலும் பூனையின் சைக்காலஜி வித்தியாசமானது. வீட்டிற்கு புதிய ஆட்கள் வரும்பட்சத்தில், இதை துாக்குவது, கொஞ்சுவது கூடாது. இதை திட்டினாலோ, அடித்தாலோ மறைவான இடத்தில் ஒளிந்து கொள்ளும். இச்சமயத்தில் தொந்தரவு செய்யாமல் இருந்தால் தான், பழைய மனநிலைக்கு திரும்பும்.
பூனையை விட பெரிய உருவத்தில் இருக்கும் பொம்மைகளை விளையாட வாங்கி தந்தால், அது பயப்படும். சிலர் வீட்டில் வளர்க்கும் பூனைக்கு மணி கட்டிவிடுவர். இதன் சத்தத்தில், தெரு பூனைகளோ, நாட்டு பூனைகளோ எளிதில் அடையாளம் கண்டு, சண்டையிட்டு கொள்ளும். இதனால், வீட்டில் வளர்க்கும் பூனைக்கு மணி கட்ட கூடாது.
- டாக்டர் தீபன்ஷிகா கஷ்யப்
தொடர்புக்கு: ideepanshik@gmail.com